04 செப்டம்பர் 2012

கருணாநிதி ......கொஞ்சம் திரும்பி பார்ப்போமா....!


 திமுக தலைவர் கருணாநிதி மீது பல்வேறு விமர்சனங்கள்  இருந்தாலும் கடந்த   ஐம்பது வருடங்களாக  தமிழகத்தில் இவர் இல்லாமல் அரசியலில் நல்லதும் நடந்தது இல்லை கெட்டதும் நடந்தது  இல்லை என்பது  யாராலும்  மறுக்க  முடியாத உண்மை...அப்படிப்பட்ட  மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவரின்  வாழ்க்கை  வரலாற்றை  கொஞ்சம் பார்க்கலாம்...அவரை விமர்சிப்பவர்களில் பதிவுலகில் நானும் ஒருவன்....ஆனால்  விமர்சித்தாலும்,ஆதரித்தாலும்  அவரை பற்றி தெரிந்து கொள்வது  தேவையான  ஒன்று என்றே நினைக்கின்றேன்...


திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜுன் 3 ந்தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார். கருணாநிதிக்கு சண்முகசுந்தரம், பெரியநாயகி என்று இரு தமக்கைகள். குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை கருணாநிதி. முத்துவேலர் கவி எழுதும் ஆற்றல் பெற்றவர்.
வடமொழிக் கிரந்தங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். அத்துடன் மிகுந்த கடவுள் பக்தர். பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும், இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராகக் கருணாநிதி விளங்கினார். அப்போது, "மாணவ நேசன்" என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.



இதுதான் பிற்காலத்தில் முரசொலி என்ற பெயரில் துண்டு வெளியீடாகவும், அதன்பின் வார இதழாகவும், நாளிதழாகவும் வளர்ந்தது. "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்" என்ற அமைப்பைத் தொடங்கி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து, மன்றத்தில் பேசச் செய்தார்.



1942 ல் அண்ணா நடத்தி வந்த "திராவிட நாடு" ஏட்டின் மூன்றாவது இதழில், கருணாநிதி எழுதிய "இளமைப்பலி" என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு விழாவுக்காகத் திருவாரூர் வந்த அண்ணா, "இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள்.
நான் பார்க்கவேண்டும்" என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் போய் நின்றார். `கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார்' என்று நினைத்திருந்த அண்ணா, ஒரு சிறுவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.



  1944 செப்டம்பர் 13ந்தேதி கருணாநிதிக்குத் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் பத்மா.
கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றைப் பார்த்து பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த "குடியரசு" வார இதழின் துணை ஆசிரியராகக் கருணாநிதியை நியமித்தார். 1946 ல் திராவிடக் கழகத்தின் கொடி உருவாக்கப்பட்டபோது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு கருணாநிதி தன் ரத்தத்தைக் காணிக்கை ஆக்கினார். பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.


இந்தச் சமயத்தில் கோவை ஜுபிடர் நிறுவனத்தினர் தயாரித்த "ராஜகுமாரி" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் வெளிவந்தபோது, கருணாநிதி தந்தையின் கண் ஒளி மங்கியிருந்தது. எனினும் தியேட்டருக்குச் சென்று, வசனங்களைக் கேட்டு மகிழ்ந்தார். மகனின் ஆற்றலைக்கண்டு பெருமிதம் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப்பின், அவர் காலமானார். கருணாநிதிக்குத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின. மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி, "அபிமன்யு" படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால், படத்தில் அவர் பெயர் விளம்பரப்படுத்தப்படவில்லை.


திராவிடக் கழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அவர் மனைவி பத்மா, கணவரையும், கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார்.
 மனைவி பத்மாவின் மரணம் கருணாநிதியைப் பெரிதும் பாதித்தது. உறவினர்கள் அவரைத்தேற்றி, குழந்தையாக இருக்கும் முத்துவை கவனித்துக் கொள்வதற்காகவாவது மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
முடிவில் 1948 செப்டம்பர் 15 ந்தேதி, தயாளு அம்மாளை கருணாநிதி மணந்து கொண்டார். திருமாகாளம் என்ற ஊரைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகள் தயாளு.


 1949 ஜுலை 9 ந்தேதி, தனக்கு வாரிசுரிமை வேண்டுமென்பதற்காக மணியம்மையை பெரியார் மணந்தார். இதனால் திராவிடக் கழகம் பிளவுபட்டு, செப்டம்பர் 17 ந்தேதி அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உதயமாயிற்று.
தி.மு.கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராய் முன்னேறிய கருணாநிதி, மாடர்ன் தியேட்டர் தயாரித்த "மந்திரி குமாரி" படத்துக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார். 1952 ல் "பராசக்தி" படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தைத் தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.


1953 ஜுலை மாதத்தில் தி.மு.கழகம் "மும்முனைப் போராட்டம்" நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரைக் "கல்லக்குடி" என்று மாற்றக்கோரி நடந்த போராட்டத்தில், தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்தார், கருணாநிதி. அவரைப் போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1954 ல் வெளியான `மனோகரா' படத்தில் இடம் பெற்ற கருணாநிதியின் வசனங்கள், அவர் புகழை இமயத்துக்குக் கொண்டு சென்றன.



 கொஞ்சம் கேப் விட்டாச்சு .....மீண்டும்  பார்க்கலாம் ......

நன்றி மாலைமலர் காலசுவடுகள்...


3 கருத்துகள்:

  1. நல்லதொரு தொடரைத் தான் ஆரம்பித்து உள்ளீர்கள்...

    அவரின் எழுத்துக்களையும், திரைப்படத்தின் வசனங்களையும் மட்டும் ரசிப்பேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. நன்றி...ஆனால் இது மாலைமலரின் காலசுவடுகள் எனும் பதிப்பில் படித்து நான் பகிர்ந்த ஒன்றே.

    பதிலளிநீக்கு
  3. இவர் வளர்ந்தது வாழ்ந்தது தமிழால்; தமிழர் இனம் வீழ்ந்தபோது இவர் அதனைத்தாங்காமல் போனது ஏன்? மறக்காமல் அதையும் பதிவு செய்க.

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....