09 டிசம்பர் 2012

காவிரி பிரச்சினை.... ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்...உடனடி தீர்வு கிடைக்குமா?!....



காவிரி நீர் பிரச்சினைக்காக ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதம்....உடனடியாக கர்நாடகா தண்ணீர்  திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதத்தை தொடங்கினார் !


காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 25 ந்தேதி இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. "ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விடவேண்டும்" என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. 

(1 டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி). சுப்ரீம் கோர்ட்டும் இந்த இடைக்கால தீர்ப்பை உறுதிபடுத்தியது. ஆனாலும், கர்நாடகம் போதுமான அளவு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விடவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதனால் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் எதிர்க்கட்சியினர், 

"பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக தலையிட்டு கர்நாடக அரசை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடும்படி செய்யவேண்டும்" என்று தொடர்ந்து வற்புறுத்தினார்கள். இந்த பிரச்சினையில் பிரதமர் நரசிம்மராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்துவதற்காக முதல் அமைச்சர் ஜெயலலிதா 18.7.1993 அன்று `திடீர்' உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 






காலை 9.15 மணிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர். சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து வணங்கினார். பின்னர் அவர் சமாதியின் முன் பகுதியில் நாற்காலியில் அமர்ந்து கொளுத்தும் வெயிலில் உண்ணாவிரதம் தொடங்கினார். 

முதல் அமைச்சர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்ற செய்தி, அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்சி தொண்டர்கள் உள்பட யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் உண்ணாவிரதத்தை தொடங்கியது எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. அதன் பிறகுதான் அமைச்சர்கள், அதிகாரிகள் அவசரம் அவசரமாக அங்கு சென்றனர். 

அமைச்சர்களும், அதிகாரிகளும் வரும் வரைக்கும் ஜெயலலிதா சுட்டெரிக்கும் வெயிலில் உட்கார்ந்து இருந்தார். பகல் 11 மணி அளவில் அங்கு பந்தல் போடப்பட்டது. பின்னர் அந்த பந்தலில் அமைக்கப்பட்ட தனி மேடையில் ஜெயலலிதா அமர்ந்தார். அனைத்து அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கூடினார்கள். 

உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அங்கு இருந்தபடியே அரசு "பைல்"களை பார்த்தார். அவ்வப்போது தலைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன், உள்துறை செயலாளர் மலைச்சாமி, சுகாதாரத்துறை செயலாளர் இன்பசாகரன் மற்றும் அதிகாரிகளை முதல் அமைச்சர் அழைத்துப் பேசினார். தமிழக கவர்னர் சென்னா ரெட்டி புதுச்சேரி சென்று இருந்தார். 

ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதை அறிந்ததும், அவர் அவசர அவசரமாக சென்னை திரும்பினார். கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். உண்ணாவிரதம் இருப்பதற்கான காரணத்தை கவர்னரிடம் ஜெயலலிதா விளக்கினார். இருப்பினும் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். 

அதற்கு ஜெயலலிதா பதில் அளிக்கையில், "காவிரி நடுவர்மன்றத்தீர்ப்பை அமல்படுத்தும்படி அரசியல் சட்டத்தின் 256வது விதியின் கீழ், கர் நாடக அரசுக்கு பிரதமர் நரசிம்மராவ் உத்தரவிடவேண்டும். அவ்வாறு பிரதமர் உத்தரவிடும் வரை நான் எனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிடமாட்டேன்" என்று கூறினார். 


 21 ந்தேதி 4-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்தது. இந்த நிலையில் காவிரி பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக மத்திய நீர்வள துறை மந்திரி வி.சி.சுக்லாவை பிரதமர் நரசிம்மராவ் அனுப்பி வைத்தார். 

வி.சி.சுக்லா 20-ந்தேதி இரவு பெங்களூர் சென்று கர்நாடக முதல் மந்திரி வீரப்பமொய்லியுடன் பேச்சு நடத்தினார். பிறகு மறுநாள் காலை சென்னை வந்தார். 
விமான நிலையத்தில் இருந்து அவர் நேராக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கும் இடத்துக்கு சென்றார். ஜெயலலிதாவுடன் வி.சி.சுக்லா பேச்சு நடத்தினார். காவிரி நீர் தொடர்பாக 2 கமிட்டிகள் அமைத்து கண்காணிக்கப்படும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்தார். இதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார். 

மாலை 5.30 மணி அளவில் மத்திய மந்திரி வி.சி.சுக்லா பழச்சாறு எடுத்து முதல் அமைச்சரிடம் கொடுக்க அதை ஜெயலலிதா வாங்கி பருகி உண்ணாவிரதத்தை நிறுத்தினார்...


பிளாஷ்பேக் ஓவர்...



 மக்களே...படித்தவுடன் கடுப்பா இருக்கா?அட பாவிகளா இது நடந்து 20 வருடங்களை தாண்டியும் இன்னும் அதே பிரச்சினை தொடர்ந்து வருகிறதே!என்றுதான் இதற்கு தீர்வு என கேட்க தோன்றுகிறதா?

அதானே !யாரிடம் கேட்பது?!!...இந்தியாவில்தானே இந்த இரண்டு மாநிலங்களும் இருக்கின்றன என்ற சந்தேகம்  வேற எழுகின்றதே?அதையும் யாரிடம் கேட்பது?

அன்றிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டிலும்,கர்நாடாகாவிலும் எத்தனையோ முறை ஆள்பவர்கள் மாறிவிட்டார்கள்...ஆனால் தண்ணீர்தான் வந்த பாடில்லை...


தண்ணீரை வைத்து இரு மாநில விவசாயிகளிடமும்  கண்ணீரை வரவைத்து  அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை இந்த  பிரச்சினை ஓயாது ... 

இதற்கு எப்பத்தான் விடிவு ?


3 கருத்துகள்:

  1. இந்தியாவை ஒரே நாடு ஒரே மக்கள் என்று மாற்றுங்க..இந்தியக் குடிமகன், அவன் எந்த மாநிலம் எந்த இனம் என்ற வரையறையில் பாதிக்கப்படாமல் இருக்க சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள். இனம், மதம் மற்றும் மாநிலம் என்று தாக்கத்தை ஏட்படுததும் அனைத்து அதிகாரங்களையும் மாநில அரசிடமிருந்து பிடுங்குங்கள்.அதை மத்திய அரசிற்கு கொண்டு போங்கள். காவிரி பிரச்சினை மட்டுமல்ல நிறையப் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும்...

    பதிலளிநீக்கு
  2. உண்ணா விரத மேடையின் முன்னாள் அம்மா உட்கார்ந்த பொது நானும் அங்கேயிருந்தேன், ஆனால் அம்மாவை மூன்று நாள் பட்டினி போட்டு கொடுமை படுத்திட்டானுங்க. மறுபடியும் ரிபீட்டான்னு பார்த்தேன், சூடு பட்ட பூனை மீண்டும் அந்த தவறைச் செய்யாது !!!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....