08 செப்டம்பர் 2012

இந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா?


இந்தியாவில்  1652 க்கும்  மேற்பட்ட  மொழிகள்  பேச்சு வழக்கில் உள்ளன .....

ஆனால் இந்தியாவின்  அலுவல் மொழி     இந்திதான்....இந்தியுடன் சேர்த்து  அங்கீகரிக்கப்பட்ட  அலுவல் மொழிகள் 22..இதில் தமிழ் மொழியும் ஒன்று ...

 ஆனால் இதில்  இந்திதான் பெரும்பாலான  இடங்களில்  அலுவல் மொழியாக  பயன்படுத்தப்பட்டு  வருகிறது....உடன்பாடு இருந்தாலும் இல்லை என்றாலும்  இதை ஏற்றுதான் ஆக வேண்டும்....

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அலுவல்  மொழியை அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பேசுவான்....அறிந்து இருப்பான்...

நான் வேலை பார்க்கும் மலேசியாவின்  அலுவல் மொழி மலாய் மொழி....மலேசியாவில் சீனர்கள், இந்தோனோசியர்கள் என பல தரப்பட்ட  மக்கள் வாழ்ந்தாலும் அனைவரும் மலாய் மொழி  பேசுபவர்களாகத்தான்  இருப்பார்கள்....

நேற்று  வேலை முடிந்து  ஒரு டேக்ஸியில்  வீடு திரும்பி கொண்டு இருந்தேன்...டிரைவர்  ஒரு  மலாய்காரர்...நான்  இந்தியன் என்றவுடன் என்னுடன் சரளமாக  பேசி கொண்டு வந்தவர் உங்களுக்கு   இந்தி தெரியும்தானே  என்றார்....நான் தெரியாது என்றேன்....இந்தியாவின் மொழி இந்திதானே..அப்புறம் எப்படி தெரியாது என்கிறீர்கள் ? என்றார்....

நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...

நாம்  இனத்தால் தமிழன்  ஆனாலும்  ஒரு குடிமகனாக  மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது  இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான  இந்தியை தமிழர்களான  நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?

ஒரு இந்திய குடிமகனாக  வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய  விசயம்  அல்லவா ?

ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கற்று  தராமல்  போனதற்கு நம் சுயநல அரசியல்வாதிகள்தானே காரணம்?தமிழ் ,தமிழ்நாடு என சொல்லி ஒட்டு பிச்சைக்காக  அரசியல் நடத்திய  அயோக்கிய  அரசியல்வாதிகள்தானே  இதற்கு காரணம்...?

இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை நான்  குறை கூறவில்லை ....ஆனால் ஒரு மொழியாக ஆங்கிலத்தை நமக்கு பள்ளிகளில்  கற்று  தந்ததை போல இந்தியை  ஏன் கற்று தரவில்லை?இந்தி திணிப்பை  எதிர்த்து இருக்கலாம்...இந்தி தெரிந்து கொள்வதையுமா  எதிர்ப்பது?

உலகின் பன்மையான மொழியான தமிழை பேசுவதால் பெருமை அடையும் அதே வேளையில்   நம் நாட்டின் தேசிய  மொழியான இந்தியை  தெரியாததால்  நிச்சயம்  கவலையும்  அடைய வேண்டும்....

தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன்  ஆக முடியாதோ  அது போல இந்தி தெரியாதவன்  இந்தியனாக இருக்க முடியுமா?பதில்தான் தெரியவில்லை....

62 கருத்துகள்:


 1. நான் தமிழ்நாட்டுக்காரன் அதனால் என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா என கேட்டார் ?நான் முழிக்க ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை பார்க்க வந்த நாட்டின் மொழியான மலாய் மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின் மொழியான இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை மவுனத்தையே அவருக்கு பதிலாக கொடுத்தேன் //  அவ்ருடைய கேள்வியும் சரியாகத்தானே உள்ளது
  உட்ல் அதுக்கு உயிர் இதுக்கு எனஎன்னனவோ சொல்லி
  எங்கள் காலத்தில் எங்களையெல்லாம் உணர்வு பூர்வமாக்த்
  தூண்டிவிட்டு அவர்கள் ஆட்சியைப்பிடித்துவிட்டார்கள்
  நாம்தான் ஏமாந்து போனோம்
  சிந்திக்கச் செய்துபோகும் பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..பாலாய் போன அரசியலால் நாம் இழந்ததுதான் இதுவும்...நன்றி சார்

   நீக்கு
 2. தான் தவறு செய்யும் போது வக்கீலாகவும், அடுத்தவர் தவறு செய்யும் போது நீதிபதியாகவும் நாம் இருக்கிறோம், என சமீபத்தில் முகபுத்கம் சொல்லியது,

  சோ இப்ப நீங்க வக்கீல் நான் நீதிபதி,

  ஹிந்தி தெரியாத ஆளுங்க பொதுவா சொல்ற கருத்து என்னன்னா, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பண்ணி, நாமளா ஹிந்தி படிக்க விடலன்னு,ok ஸ்கூல் ல படிக்க முடியல ஓகே, பட் அதை சொல்லிகொடுக்க தக்ஷின் பாரத ஹிந்தி பிரசார் சபா மூலமா தமிழ்நாட்டுல சொல்லி தரங்கா,

  சோ ஹிந்தி தெரிஞ்சிக்கணும் நு நினைக்குற எல்லாரும் அங்க போய் சேந்து பார்ட் டைம் கிளாஸ் அட்டென்ட் பண்ணி படிக்கலாம் , அதுக்கு சென்ட்ரல் அரசு கொடுக்கும் சான்றிதல் உண்டு.
  முதல் வகுப்பு பேரு - பிரத்மிக் , செகண்ட் கிளாஸ் பேரு வந்து மத்யமா, இப்படி ஏழு கிளாஸ் பாஸ் பண்ண நீங்க பெரிய ஹிந்தி தெரிஞ்ச அப்படாக்கர் ஆகலாம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட நீங்க நீதிபதியாகவே இருந்துவிட்டு போங்க....இந்தில நான் பெரிய அப்பாடக்கர் ஆகணும்லாம் சொல்லவே இல்ல...ஜஸ்ட் தெரிந்து இருக்க வேண்டும் என்றுதான் சொல்லி இருக்கிறேன்...

   நீக்கு
 3. உங்கள் கருத்தை இரண்டு விதமாக விளக்குகிறேன்.

  அதாவது முதல் விஷயம் இந்தி தேசிய மொழி என்பது. அது தவறு. அதாவது இந்தி தேசிய மொழி இல்லை என்று சமிபத்தில் தமிழ் நாடு கோர்ட் இல்லை, குஜராத் கோர்ட்டே சொல்லியது, இந்தி அலுவலக மொழி மட்டுமே. பார்க்க, http://www.thehindu.com/news/national/article94695.ece.

  அடுத்து இந்தி தெரியாமல் நாம் படும் பாடு. அதாவது நிங்கள் மலேசியாவில் இருக்குறீர்கள், ஆதலால் பிரச்சனை இல்லை, இங்கு வளைகுடாவில் இந்தி தெரியவில்லை என்றால் நம்மை மதிக்கவே மாட்டார்கள், ஏனெனில் துபையில் அதிகமான அரபிகள் இந்தி பேசுவார்கள், அவர்களே இந்தி பேசும் பொது நம்மால் பேச முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படும், மலையாளிகளில் 90% பேர் இந்தி பேசுவார்கள். அவர்கள் பள்ளியில் இருந்தே படித்து வந்ததால் அதில் ஒன்னும் பிரச்சனை ஏற்படாது, நாம் தான் இந்தி எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை வைத்து இத்துனை காலமும் இந்தியை கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கலைஞரின் பேரன் தயாநிதி மாறன் இந்தி பேசுவார், அன்புமணி ராமதாஸ் தன்னுடைய பெற பிள்ளைகளை இந்தி சொல்லிக் கொடுக்கும் பள்ளி குடத்தில் டெல்லியில் படிக்க வைத்தார், ஆனால் நாம் தான் இன்னும் இப்பட்யே இருக்கிறோம். நாமாக இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் இப்போதும் எல்லா பள்ளிக் கூடங்களிலும் இந்தி சொல்லிக் கொடுப்பதில்லையே, குறிப்பாக அரசு பள்ளி கூடங்களில், என் இந்த நிலைமை? அரசாங்கமே முடிவு எடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொல்லி உள்ளீர்கள்.....நன்றி

   நீக்கு
  2. //இந்தி தேசிய மொழி இல்லை// .சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க.

   நீக்கு
  3. ///அடுத்து இந்தி தெரியாமல் நாம் படும் பாடு. அதாவது நிங்கள் மலேசியாவில் இருக்குறீர்கள், ஆதலால் பிரச்சனை இல்லை, இங்கு வளைகுடாவில் இந்தி தெரியவில்லை என்றால் நம்மை மதிக்கவே மாட்டார்கள், ஏனெனில் துபையில் அதிகமான அரபிகள் இந்தி பேசுவார்கள்,/// இதுவும் ஒரு தவறான கருத்து தான். நான் வளைகுடா நாடுகளில் பத்து வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். இப்போதும் துபாயில் தான் இருக்கிறேன். என்னிடம் ஹிந்தி பற்றி கேட்பவர்களுக்கு சரியான முறையில் பதில் கூறி விடுவேன்( அதாவது ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி இல்லை, கண்டிப்பாக எல்லா இந்தியரும் ஹிந்தி அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை போன்ற உண்மைகளை). இந்த கேள்விகளை என்னிடம் இந்தியர்கள் தான் கேட்டுள்ளனர். முதலில் இந்தியர்களுக்கே உண்மை என்னவென்று தெரியாது. இது எல்லாம் தமிழனின் தாழ்வு மனப்பான்மையினால் வருவது. மற்றவர்கள் மதிக்க மாட்டாங்க என்பதெல்லாம் சும்மா. ஒரு மாநில அரசாங்கம் , தாய் மொழியையும், ஒரு மற்ற மொழி நாட்டினுள்ளும், உலகத்தாரோடும் தொடர்பு கொள்ள கற்று தருகிறது. ஆங்கிலம் என்ற அந்த மொழி இந்தியாவின் அலுவல் மொழிகளில் ஒன்றுதான். மத்திய அரசாங்க அலுவலகங்களில் உபயோக படுத்தலாம். இதற்கு மேல் நீங்கள் எதனை மொழிகள் வேண்டுமானாலும் ஹிந்தி உட்பட, உங்கள் சொந்த முயற்சியில் கற்று கொள்ளலாம். அரசாங்க கைய புடிச்சு இழுக்காது.

   நீக்கு
  4. இப்படியாக அலுவல் மொழிகளில் ஒன்றான ஆங்கிலத்தை உபயோக படுத்த விடாமல் ஹிந்தியை மட்டும் பிடித்து தொங்குபவர்களை எதிர்க்காமல், தேவையில்லாத இடத்தில தாளம் போடுவதற்கு மற்றொரு பெயர் தாழ்வு மனப்பான்மை அல்லது சந்தர்ப்ப வாதம்.

   நீக்கு
 4. நம்மில் பலர் ஆங்கிலத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஹிந்திக்கு கொடுப்பதில்லை, இந்தி என்பதே நமக்கு வேண்டாத ,மொழியாகிவிட்டது, அதனாலேயே வளைகுடா வந்ததற்கு பின்னால் இந்தி கற்றுக் கொள்ள சொன்னால் நமக்கு சொல்பவர் மேல் வெறுப்பாக இருக்கிறது. நம் பள்ளிகளும் (ஆங்கில வழி தனியார் பள்ளிகளும் / அரசு பள்ளிகளும்) இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்போது வேண்டுமானால் நிலைமை மாறி இருக்க கூடும், ஆனால் கடந்த காலங்களில் இதற்கு பள்ளிகளும், அரசாங்கமும் முக்கிய காரணமாகி விட்டதை யாரும் மறுக்க முடியாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளிகளில் சொல்லி கொடுக்காததுதான் அடிப்படை தவறு.....

   நீக்கு
  2. //பள்ளிகளில் சொல்லி கொடுக்காததுதான் அடிப்படை தவறு//.
   அரசாங்க பள்ளிகளில் பத்தாவது வகுப்புவரை ஆங்கிலம் கட்டாய பாடம்.அரசு பள்ளியில் (இப்போது)பத்தாவது வரை மட்டுமே படித்த எத்தனை பேர் ஆங்கிலம் பேசுகின்றனர் என்று சொல்ல முடியுமா?.

   நீக்கு
  3. வளைகுடா நாடுகளில் ஹிந்தி தெரியவில்லை என்றால் வேலை கொடுக்க மாட்டார்களா? எனக்கு இது வரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. அதுவும் இல்லாம நீங்கள் வளைகுடா நாடுகளில் முக்கியமாக துபாய் போன்ற பன்முக கலாசார மக்களை கொண்டுள்ள இடத்தில ஹிந்தி ஒரு அவசிய தேவை இல்லை. ஹிந்தி தேவை என்று அழுத்தம் கொடுப்பவர், அவர் தொடர்பு கொள்ளும் முறை எளிதாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்தியர், பாகிஸ்தானியர் மற்றும் பங்களாதேசிகளாக இருக்கும். அவர்களின் இந்த வலையில் விழுந்து உண்மை தெரியாமல், புரியாமல், ஹிந்தி தெரியாதது பெரிய குற்றம் போல என்ற தாழ்வு மனப்பான்மையில் , ஹிந்தி பள்ளிகளில் கற்று கொடுக்காதது தவறு என்ற பரப்புரையை வெகுவாக செய்வது வளைகுடா வாழ் தமிழர்களே.

   நீக்கு
  4. பள்ளிகளில் ஒவ்வொரு மாணவனும் பெரியவன் ஆகி வேலைக்கு எங்கே போக போகிறான் என்று கணித்து வேற வேற மொழியை கற்று கொடுக்க வேண்டுமா? தமிழ் நாட்டில் இருந்து எத்தனை பேர், வளைகுடா நாடுகளுக்கும், வட இந்தியாவிற்கும் வேலைக்கு போகிறார்கள்? எத்தனை சதவிகிதம்? உங்களுக்காக, அனைவருக்கும் ஹிந்தி கற்று கொடுக்க வேண்டுமா, தேவை இல்லாம?

   நீக்கு
  5. jack // நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.. நான் சவுதியில் உள்ளேன்.. இங்கும் நீங்கள் சொல்வது போல் ஹிந்திப டி படி என்று சொல்கிறார்கள்.. நீங்கள் சொன்னபடி பெரிய சிரமம் ஒன்றும் இல்லை..

   நீக்கு
 5. "தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன் ஆக முடியாதோ " உங்களுக்கு நகைசுவை உணர்வு மிகவும் அதிகம். தமிழ் நாட்டில் எத்தனை குழந்தைகளுக்கு தமிழ் தெரியும்? எழுத தெரியாவிட்டாலும் பேசவாவது தெரிகிறதா?
  இந்த நிலைமையில் முதலில் தமிழ் நாட்டு குழந்தைகளுக்கு தமிழை அறிந்து கொள்ள வேண்டும் அல்லது அறிந்து கொள்ளவேண்டும என்ற வகையில் ஏதாவது திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் அதன் பின்னர் ஹிந்தி படிப்பதற்க்கு முயல வேண்டும். நமக்கு முதலாவதே சிக்கலாக இருக்கிறது.
  இரண்டாவதாக ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அது என்ன புது வகை விளக்கம் "ஆனால் இந்தியாவின் அலுவல் மொழி அதாவது national languvage இந்திதான்." http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi
  ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே.
  மலேசியா யாவில் அனைவருக்கும் மலாய் மொழியுடன் தமது தாய் மொழியும் தெரியும். நம்ம நாட்டில் தாய் மொழியே அந்தரத்தில் இருக்கிறது. பக்கத்து நாடான சிங்கப்பூரில் நான்கு தேசிய மொழிகள் ஆனால் பெரும்பாலானோருக்கு தாய் மொழியையும் ஆங்கிலத்தையும் தவிர வேறு எதுவும் தெரியாது. மலேசியாவில் சகல இன மக்களும் மலாய் இன மக்களுடன் சேர்ந்தே வாழ்கின்றார்கள். எந்த இனமும் தனி பிரதேசத்தை கட்டியாள வில்லை. ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு பிரதேசம் உண்டு . இதே பிரச்சினையை சிறிலங்காவில் பார்த்தோம் என்றால் வட கிழக்கில் உள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சிங்களம் தெரியாது. ஆனால் சிங்களவருடன் சேர்ந்து வாழும் மலையக தமிழருக்கு சிங்களம் சரளமாக தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கருத்துக்கள்....முடிவில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?இந்தி தெரிந்து வைத்திருக்க வேணுமா?வேண்டாமா?

   நீக்கு
 6. ஹிந்தியோ, ஆங்கிலமோ... எந்த மொழியானாலும் சரி... நமக்கு உதவும் மொழியை ஆராய்ந்து முழுதாக கற்றுக் கொள்ள வேண்டும்...(எழுத, படிக்க, பேச)

  உலகம் முழுவதும் சுற்றலாம் (யாருடைய துணையும் இன்றி...)

  சுருக்கமாக : நான்கு மொழிகள் ஒருவருக்கு தெரிந்தால்-அவர் நான்கு பேருக்கு சமம்...

  பதிலளிநீக்கு
 7. ஒரு அறிவது என்பது ஒரு மனிதன் நமக்குள் வருவதற்க்கு சமம்...

  இந்தியாவில் அதிகமான மக்கள் இந்தியை பேசுவதால் அனைத்து துறையிலும் இந்தி ஆக்கிரமித்து வி்டடது..

  இந்தி திணிப்பை ஒழிப்பதாய் நினைத்து ஒரு மொழியை நாம் ஒதுக்கி வைத்துவிட்டோம். அனால் தமிழும் அந்தப்பக்கம் செல்லாமல் நின்று விட்டது...

  ஆரம்ப கட்டத்தில் மத்திய அரசு இந்தி திணிப்பது மாதிரி இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தால் நாமும் இந்தி படி்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #ஆரம்ப கட்டத்தில் மத்திய அரசு இந்தி திணிப்பது மாதிரி இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தால் நாமும் இந்தி படி்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்#

   இது சரியாகத்தான் படுது ...நன்றி

   நீக்கு
 8. இந்தியா சுதந்திரம் அடைஞ்ச ஒடனே ஏம்ண்ணே தமிழ தேசிய மொழியா அறிவிக்கல? அந்தளவுக்கு தமிழு கேடு கெட்ட மொழியாண்ணே.அப்படி ஒரு கேடு கெட்ட மொழி பேசுற தமிழர்கள் வாழுற தமிழ் நாட்ட(மெட்ராஸ் மாகாணம்)ஏம்ண்ணே இந்தியாவோட ஒரு மாநிலமா சேத்தாங்க?.யாராவது சொல்லுங்கண்ணே.தமிழ் நாட்ட தாண்டி போக தேவ இல்லாதவங்களுக்கு இந்தி தெரியணும்னு என்ன அவசியம் வந்ததுண்ணே.ஓசியில அரிசி குடுக்குறாங்க.அத பொங்கி தின்னுட்டு பொழுத கழிக்கறவங்களுக்கு இந்தி தெரிஞ்சுக்கணும்னு என்ன அவசியம்ணே.

  பதிலளிநீக்கு
 9. இந்தியனாக இருக்க முடியுமோ என்னவோ,ஆனால் வட இந்தியாவில் வாடவே ண்டியதுதான்.சிலரின் ஆதாயத்துக்காக ஒரு தலை முறையே இந்தி தெரியாமல் போய்விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நிச்சயமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஒன்றுமே செய்ய முடியாது...ஆங்கிலம் தெரிந்தாலும் இந்தியில்தான் அவர்கள் பேசுவார்கள்.

   நீக்கு
 10. கேள்வி சிந்திக்க மட்டும்...
  நாளைக்கு சீனாக்காரன் இந்தியாவைக் கைப்பற்றி சீன மொழி படிக்க சொன்னால் ஹிந்திக்காரன் படிப்பானா?

  வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்தியா கிடையாது; இந்தியா ஒரு [துணை] கண்டம் அப்ப்ரிக்கா மாதிரி. படேல இந்தியா என்ற ஒன்றை பெவிகால் போட்டு ஓட்டினார். ஆப்பிரிக்காவில் பல பல மொழிகள் பல பல தேசங்கள்...இப்போ ஆப்ரிக்காவிற்கு ஒரே ஒரு மொழி [ஹிந்தி மாதிரி] தேசிய மொழியா கொண்டு வரவேண்டுமென்றால், எந்த மொழியைக் கொண்டு வருவீர்கள்.

  ஹிந்திக்கு பதில் தமிழ் தேசிய மொழியாக கொண்டு வந்தால் ஹிந்திக்காரன் ஒத்துக் கொண்டிர்ருப்பானா? (அப்போ 34 விழுக்காடு மக்கள் தான் ஹிந்தி பேசினார்).

  எனக்கும், வடக்கதிக்காரன் கலாசாரதிற்கும் வித்யாசம் நிறைய. சாப்பாட்டில் இருந்து எல்லாம் வேற!

  பதிலளிநீக்கு
 11. அப்போ நீங்க சொல்வதைப் பார்த்தல் இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கு சம அந்தஸ்து கேட்பது தவறு மாதிரி தெரியுது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...எதை கொண்டுபோய் எங்கு முடிச்சு போடுகிறீர்கள்?

   நீக்கு
 12. சகோ நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை,
  //நாம் இனத்தால் தமிழன் ஆனாலும் ஒரு குடிமகனாக மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை தமிழர்களான நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?

  ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய விசயம் அல்லவா ?//
  மற்ற சகோதரர்கள் கூறியது போல் இந்தி தேசிய மொழி அல்ல. பின்பு ஏன் நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

  //ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கற்று தராமல் போனதற்கு நம் சுயநல அரசியல்வாதிகள்தானே காரணம்?தமிழ் ,தமிழ்நாடு என சொல்லி ஒட்டு பிச்சைக்காக அரசியல் நடத்திய அயோக்கிய அரசியல்வாதிகள்தானே இதற்கு காரணம்...?//

  அவர்கள் செய்தது சரிதான் சகோ. அதில் தவறே இல்லை. இந்தி எதிர்ப்பு பற்றி அண்ணா கட்டுரைகள் சிலவற்றை படியுங்கள். நியாயம் புரியும்.
  இந்தியை ஏற்றுக்கொண்டதால் பல மாநிலங்களில் அம்மாநில மொழி செல்வாக்கு இழந்துவிட்டது எனபதே உண்மை.
  தமிழை காக்க அரசியல்வாதிகள் செய்த ஒரு நல்ல செயல் தான் இந்தி எதிர்ப்பு.
  ஆங்கிலம் இருந்தால் உலகையே சுற்றி வரலாம் பின்பு ஏன் இந்தி? சிந்தித்து பாருங்கள்....விருப்பம் இருந்தால் படியுங்கள்.
  //தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன் ஆக முடியாதோ அது போல இந்தி தெரியாதவன் இந்தியனாக இருக்க முடியுமா?பதில்தான் தெரியவில்லை....//

  இபோழுது பதில் தெரியும் என நினைக்கின்றேன்.
  நன்றி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி..நான் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தவறு என சொல்லவில்லை....இந்தி திணிக்க பட்டதை எதிர்த்து நடந்த போராட்டம் முற்றிலும் சரி...அதற்காக இந்தியே தெரிந்து கொள்ளாமல் இந்த சந்ததியினரில் பெரும்பாலோர் இருப்பதற்கு பள்ளிகளில் அதை சொல்லி தராததுதான் சரியா என கேட்டு இருக்கிறேன்...

   நீக்கு
 13. இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை.....

  சபாஷ் சரியான அடி...

  தமிழா? இந்தியா? தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடத்துவோம். இந்தி வென்றால் இந்தி படித்து இந்தியனாக இருப்போம். தமிழ் வென்றால் தமிழனாக இருப்போம்.

  அதே போன்று இந்துவா? கிறித்துவமா? முஸ்லீமா? என்றும் வாக்கெடுப்பு நடத்தி எது பெரும்பான்மையாக வருகின்றதோ அதை நாம் கொண்டாடி ஏற்றுக்கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை என்று எங்கு நான் சொன்னேன்...இந்தியாவின் மொழி இந்திதான் என பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இனி வரும் வேலையில் அதை பற்றி அடிப்படை வார்த்தைகளாவது தெரியாமல் இருப்பது சரியா எனதான் எழுதி இருந்தேன்...இதற்கு நீங்கள் வேறு விதமாக பதில் எழுதி வேறு பக்கமாக பிரச்சினையை திசை திருப்புகிறீர்கள்...இது சரியல்ல..

   நீக்கு
 14. மலேசியாவின் பூமி புத்திரர்கள் மலாய் இனத்தவர். அங்கே பிழைக்கச் சென்ற சீனர்கள், இந்தியர்கள் அந்த இனத்தின் மொழியை பேசுவதில் என்ன தவறு?

  டில்லிக்கோ, மும்பைக்கோ பிழைக்கச் செல்லும் தமிழர்கள் இந்தி கற்றுக்கொண்டு பேசமாட்டோம் என்றா கூறுகின்றார்கள்?

  இந்தி தேசிய மொழியா?

  என்னது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியா?

  அப்ப தேசிய மதம் என்ன?

  பெரும்பான்மை மக்களின் மதமே தேசிய மதமாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியாவின் தேசிய பறவை மயில்....காக்கைகளை காட்டிலும் இந்தியாவில் மயில்தான் அதிகமா?இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி....ஆனால் இந்தியாவில் கோடி கணக்கான நபர்கள் விளையாடுவதும் பார்ப்பது ஹாக்கியை அல்ல..கிரிக்கெட்டை தான்...எனவே இதில் பெரும்பான்மை பார்ப்பது சரி அல்ல..நான் மொழியை பற்றி பேசினால் நீங்கள் எதை பற்றி பேசுகிறீர்கள்?

   நீக்கு
  2. பெரும்பான்மையை கொண்டு தேசீயத்தை நிர்ணயிக்க கூடாதென்றால் பிறகு எப்படி இந்தி மட்டும் தேசிய மொழி...?

   நீக்கு
 15. நல்லவேள பாய்.

  இந்தியாவில் இருந்து வருகிறீர். ஏன் இந்துவாக இல்லைன்னு கேக்காம விட்டாரே! அந்தமட்டில் நிம்மதியாயிருங்க.

  எதுக்கும் இந்த இடுகையை (முக்கியமா பின்னூட்டங்களை) படிச்சுப் பாருங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர்களே...நான் எழுதியுள்ளதை விவாதமாக பேசினால் அது நன்றாகவே இருக்கும்..ஆனால் கொஞ்சம் பிராக்டிக்கலாக யோசித்து பாருங்கள்....தமிழ்நாட்டை விட்டு வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றவர்களில் எத்தனை பேர் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டு இருப்பீர்கள்?இந்தியை கரைத்து குடிக்க வேண்டும் என நான் சொல்லவில்லை..ஓரளவு அடிப்படையாவது தெரிந்து இருக்க வேண்டும் எனத்தான் சொல்லி இருக்கிறேன்...இதற்கு பெரும்பான்மை பற்றி பேசி பிரச்சினையை ஏன் சில நண்பர்கள் திசை திருப்புகிறார்கள் ?

   நீக்கு
  2. //தமிழ்நாட்டை விட்டு வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றவர்களில் எத்தனை பேர் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டு இருப்பீர்கள்?
   //

   தமிழகத்திற்கு சுற்றுலா வரும் வடநாட்டவர் எத்தனை பேர் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்கள்?

   //ஓரளவு அடிப்படையாவது தெரிந்து இருக்க வேண்டும் எனத்தான் சொல்லி இருக்கிறேன்.

   அதற்கு நடுவன் அரசின் துறைக்கு அஞ்சல்டையில் எழுதிப்போட்டால் வீட்டுக்கே இலவசமாகப் பாடங்களை அனுப்புவார்கள்.

   நீக்கு
 16. கடைசிக் கேள்விக்கு முதலில் பதிலளிக்க முயலுகிறேன். இந்தி தெரியாதவன் இந்தியனாக இருக்கவும் முடியும், தமிழ் தெரியாதவன் தமிழனாக இருக்கவும் முடியும். இங்கே தெரிந்து வைத்திருத்தல் என்ற சொல்லும் விவாதத்துக்கு உரியது. தமிழ் தெரிந்தவன் என்றால் என்ன? வாசிக்கத் தெரிந்தவனா, பேசத் தெரிந்தவனா, எழுதத் தெரிந்தவனா, எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவனா? எழுதவும் வாசிக்கவும் தெரிந்தவன்தான் தமிழ் தெரிந்தவன் என்றால், இன்றைய தமிழ்க் குழந்தைகள் பலரும் தமிழ் தெரியாதவர்கள் என்றுதான் கூற முடியும். அப்படியானால் அவர்கள் தமிழர்கள் அல்லாதவராகி விடுவார்களா? எனக்கு இந்தி வாசிக்கத் தெரியும், வேகமாக தட்டச்சு செய்யத் தெரியும், பேசத் தெரியும், ஆனால் எழுதத் தெரியாது. நான் இந்தி தெரிந்தவனா அல்லது தெரியாதவனா...?
  எந்தவொரு மொழியும் தகவல்தொடர்புக்கான சாதனம்தான். மொழியை வைத்து இனத்தை முடிவு செய்வதானால் தமிழக மக்களில் சிறுபான்மையினர்தான் தமிழர்களாக இருக்க முடியும். நாயுடுகள், நாயக்கர்களுக்கு தெலுங்கு, செட்டியார்களுக்கு கன்னடம், முஸ்லீம்களுக்கு உருது, சௌராஷ்டிரர்களுக்கு சௌராஷ்டிரம். இவர்கள் தவிர தமிழக எல்லைப் பகுதிகளில் பலருக்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் வழக்கு மொழியாக இருக்கிறது. அவர்கள் தமிழர்களாக இல்லாமல் போய்விடுவார்களா?
  பின்னூட்டங்களில் ஒரு செய்தி வியப்பளித்தது - துபாயில் அராபியர்கள் இந்தி பேசுகிறார்கள். அரபியர்களுக்கு அரபிதான் மொழியே தவிர இந்தியல்ல. அப்படியே அவர்கள் இந்தி பேசுகிறார்கள் என்றால், 17 விழுக்காடு மட்டுமே அராபியர்களைக் கொண்ட துபாயில், 35 சதவிகிதம் இந்தியர்கள் இருப்பதால் தம் வேலைகளின் வசதிக்காக அரைகுறை இந்தி பேசக் கற்றிருக்கக்கூடும். இந்தி என்ன, மலையாளமும்கூட கற்றிருக்கலாம். அது அவர்களின் தேவையினால் ஏற்பட்டது. இதற்கு சமமான உதாரணமாக, தில்லியில் வசிக்கும் 15 லட்சம் தமிழர்களும் 12-15 லட்சம் மலையாளிகளும் இந்தி பேசத்தான் செய்கிறார்கள். பெங்களூரில் தமிழர்கள் கன்னடம்தான் பேசுகிறார்கள். தேவை ஏற்படும்போது மொழியைக் கற்றுக்கொள்கிறோம்.
  அடுத்த விஷயம் - இந்தி அலுவல் மொழியா, ஆட்சி மொழியா என்பது. இந்தி அலுவல் மொழிதானே தவிர, ஆட்சி மொழி அல்ல. அலுவல் மொழிகளில் இந்தியும் ஒன்று, அவ்வளவே. நாடு விடுதலை பெறுகிற தருணத்தில் ஆட்சிமொழி பற்றிய விவாதங்கள் சூடுபறக்க நடந்தது. இந்தி அல்ல, இந்துஸ்தானியே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்றார் காந்தி. அதாவது, உருதுகலந்த இந்தி. ஆனால் உருது மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று தவறாக அடையாளம் காட்டிய இந்துத் தலைவர்கள் இதை எதிர்த்தனர், உருது இஸ்லாமியர்களின் மொழி என்று தவறான புரிதல் கொண்ட முஸ்லீம்கள் ஆதரித்தனர். உருது இஸ்லாமியர்களின் மொழி என்று எண்ணுபவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல, அறியாமையால் இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களும் உண்டு, மொழிகள் பற்றிய சரியான புரிதல் நம் பள்ளிக்கல்வி நூல்களில் இருந்ததில்லை. சீக்கியர்களையும் உள்ளடக்கிய பஞ்சாபியர்கள் பலர் உருது மொழி வல்லுநர்களாக இருக்கிறார்கள். உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உருது மொழி இஸ்லாமியர்களின் மொழியாக மட்டும் இல்லை, இந்துக்களும் சரளமாகப் பேசுகிறார்கள். அது மட்டுமல்ல, உருது எழுத்து வடிவம் பின்தங்கிக் கொண்டிருக்கும் காரணத்தால், உருது பத்திரிகைகளும் நூல்களும் ஆங்கில எழுத்து வடிவிலும், தேவநாகரி – இந்தி – எழுத்து வடிவிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் உருதுவை ஆட்சிமொழி என்று அறிவித்ததால் இங்கேயும் அது இஸ்லாமியர்களின் மொழியாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. விஷயம் மொழியிலிருந்து திசைதிரும்பி மதத்தை அடைந்து விட்டது.
  ... தொடர்ச்சி அடுத்த பின்னூட்டத்தில்


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எந்தவொரு மொழியும் தகவல்தொடர்புக்கான சாதனம்தான். //

   தாய்மொழி தகவல்தொடர்புக்கான சாதனம் மட்டும் என்று தயவு செய்து எண்ணாதீர்கள். ஓரிரு தலைமுறைக்குப்பின், நம் முன்னோர் சேர்த்து வைத்திருந்த இலக்கியம், மருத்துவம், பண்பாடு, அறிவியல், மண்சார்ந்த நுட்பம், வரலாறு என்று அறிவுசார் செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிட்டு அடுத்தவர் நம்மைச் சிறுமைபடுத்தும்போது வாய்மூடி ஊமையாய் நிற்க வேண்டிய நிலை வந்துவிடும். நம் முன்னோர் நமக்களித்த செல்வத்தை நம் வருங்காலச் சந்ததிக்குக் கடத்தவேண்டிய கடமை நமக்குண்டு.

   நீக்கு
  2. /// தாய்மொழி தகவல்தொடர்புக்கான சாதனம் மட்டும் என்று தயவு செய்து எண்ணாதீர்கள்./// மெத்த சரி. தாய் மொழியை ஒரு அடையாளமாக காண வேண்டும். ஹிந்தியை கட்டாயமாக அனுமதித்திருந்தால் அடையாளத்தை இழந்திருப்போம். இதுல மற்ற மாநிலங்களை ஒப்பிட வேண்டிய அவசியமே இல்லை. தமிழன் குணம் அப்படி.

   நீக்கு
 17. முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி...
  காந்தி கூறியதை கீழே தர விரும்புகிறேன்.
  I have said it time and again, and I repeat it, that Hindustani alone can become the common language of all Indians. Neither Hindi nor Urdu can take that place. I do not claim to be proficient in Hindi, but I do understand Hindi well and to some extent Urdu also. I used to attempt conversation in Urdu with my friend Maulana Abdul Bari of Firangi Mahal, Lucknow and other friends, and even now I try to speak chaste and correct Urdu with Muslim friends.
  Till all the Hindus and Muslims in our country willingly accept one language and one script, it is essential that we learn both Hindi and Urdu. Whether or not the Muslims learn Hindi and Devanagri, we must learn the Urdu language and script. At the moment we have also to atone for our crimes against the Muslims. Hence it is all the more necessary that we demonstrate our affection and sympathy for them by learning their language and script. From tomorrow onwards I wish to see sign-boards in Hindi and Urdu wherever I go.
  - Prayer Meeting at Goriakhari, 19 March 1947
  இந்தியே தேசிய மொழியாக இருக்க வேண்டும், என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது – தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்பையும் மீறி. நேருவின் தனிப்பட்ட கருத்து இதற்கு மாறாக இருந்தது. ஆதாரமாக அவரது கடிதம் இங்கே -
  My dear Brelvi,
  I have your telegram about Hindi-Hindustani. I agree with you that this move to oust Hindustani is unfortunate and undesirable. I have been trying to combat it, not with great success I am sorry to say. Unfortunately the partition business has roused passions among the Hindus and they are acting in a narrow short-sighted way in many respects.
  22 July 1947
  மேற்கண்ட இரண்டு ஆவணங்களும் இதுவரை வெளியே தெரியாதவை. முதலாவது ஆவணம் காந்தியின் நூல்தொகுப்பில் உண்டு. நேருவின் கடிதம் இன்னும் வெளிவராத ஆவணம்.
  ஆக, விவாதங்களின் முடிவில், எதிர்ப்புகளின் காரணத்தால் இந்தி முக்கிய இடம் பெற்றது.
  இந்தியாவில் இந்தி பேசப்படுவது மிகச்சில பகுதிகளில்தான் என்பது இந்தியர்களில் பலருக்கும் தெரியாது. ஹரியாணா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே இந்தி பேசப்படுகிறது. அதுவும் ராஜஸ்தானில் ராஜஸ்தானியும், ஹரியாணாவில் ஹரியாண்வியும்தான் கிராமப்புறஙகளின் மொழிகள். பீகாரில் மைதிலி, உத்திரப்பிரதேசத்தில் உருது என பிற மொழிகள்தான் பரவலாக வழக்கத்தில் உள்ளன. வடகிழக்கில் இந்தி இல்லவே இல்லை என்பதைச் சொல்லத்தேவையில்லை. இன்றும்கூட மகாராட்டிரத்தின் கிராமப்புறங்களில் இந்தியை வைத்துக்கொண்டு ஒரு நேரச் சாப்பாடு கூட வாங்க முடியாது. அங்கே முழுக்கவும் மராட்டிதான். தென்மாநிலங்களின் மொழிகள் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை. ஆக, மிகச்சிறுபான்மையினரின் வழக்கிலிருந்த இந்தி மொழியை ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று வடக்கிலிருந்த தலைவர்கள் நிர்ப்பந்தித்தனர். விடுதலைப்போராட்டம் என்று கேட்டதுமே நினைவுக்கு வருகிற முக்கியமான வடபகுதித் தலைவர்கள் அனைவருமே - நேரு காந்தி தவிர்த்து - இந்தி மொழியே சிறந்த மொழி என்ற கருத்துக்கொண்டவர்களாக இருந்தனர். தென்மாநிலத் தலைவர்களின் எதிர்ப்பால்தான் இந்தி ஆட்சிமொழி ஆகாமல் போனது. அப்படி ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.
  ... தொடரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆனால் உருது மொழியை இஸ்லாமியர்களின் மொழி என்று தவறாக அடையாளம் காட்டிய இந்துத் தலைவர்கள் இதை எதிர்த்தனர், உருது இஸ்லாமியர்களின் மொழி என்று தவறான புரிதல் கொண்ட முஸ்லீம்கள் ஆதரித்தனர். உருது இஸ்லாமியர்களின் மொழி என்று எண்ணுபவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல, அறியாமையால் இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களும் உண்டு,//

   //Whether or not the Muslims learn Hindi and Devanagri, we must learn the Urdu language and script. At the moment we have also to atone for our crimes against the Muslims. Hence it is all the more necessary that we demonstrate our affection and sympathy for them by learning their language and script//

   உருது இஸ்லாமியரின் மொழி இல்லையென்றால் பின் எதற்காக மோகன்தாஸ் காந்தி உருதைக் கற்றுக்கொள்ள வலியுறுத்தினார்?

   நீக்கு
 18. ... இறுதிப்பகுதி.
  நான் இங்கே வடக்கு-தெற்கு வாதம் புரியவில்லை. ஆனாலும், வடக்கே உள்ளவர்களின் / இருந்தவர்களின் மொழித்திமிர் பற்றி அறிந்திருக்கிறேன். வரலாற்றிலும் இதற்கான சான்றுகள் நிறையவே இருக்கின்றன.
  அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது அளிக்கப்பட்ட உறுதியைமீறி இந்தித் திணிப்பு நிகழ்ந்ததை இந்தப்பின்னணியையும் மனதில் கொண்டுதான் பார்க்க வேண்டும். நான் இந்தி ஆதரவாளனும் அல்ல, இந்தி எதிர்ப்பாளனும் அல்ல. ஆனாலும், அந்தத் திமிர்த்தனமான திணிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இந்தி தமிழகத்திலும் விருப்பப் பாடமாக இருந்திருக்க முடியும். உங்களுடைய இந்தக் கட்டுரைக்கோ என் பின்னூட்டத்துக்கோ தேவை இல்லாமலும் போயிருக்கும்.
  மொத்தத்தில், மொழி ஆதிக்க உணர்வு படைத்தவர்களின் செயலால் மொழி வெறி தூண்டப்பட்ட தலைவர்களின் போராட்டங்களால் மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி என்ற நிலையிலிருந்து மாறி இனஉணர்வு சார்ந்த விஷயமாக மாறியது. தமிழர்களுக்கு இந்தி அந்நியமானது. இதற்காக நாம் வருந்தவோ, இந்தியனாக இல்லாது போய்விட்டேனோ என்று உழலவோ தேவையே இல்லை. ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது பெரிய வித்தை ஒன்றுமல்ல. தேவைப்பட்டால் எவரும் ஓரிரு மாதங்களுக்குள் எந்த மொழியையும் கற்றுக்கொள்ள முடியும். அப்படித்தான் மும்பையில் வாழும் தமிழர்கள் மராட்டியும், தில்லியில் வாழும் தமிழர்கள் இந்தியும் இன்னபிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகளையும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
  கடைசியாக, கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல, இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை சுட்ட விழைகிறேன். // ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அலுவல் மொழியை அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பேசுவான்....அறிந்து இருப்பான்...// என்று கூற்றின்படிப் பார்த்தால் இந்தியர் ஒவ்வொருவரும் 22 மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? எனக்கு இந்தி தெரியும். தெரியாமல் போயிருந்தாலும் நான் இந்தியன்தான். தமிழ் தெரியும், தெரியாமல் இருந்திருந்தாலும் நான் தமிழன்தான்.
  // இந்தி திணிப்பை எதிர்த்து இருக்கலாம்...இந்தி தெரிந்து கொள்வதையுமா எதிர்ப்பது?// இந்தி தெரிந்து கொள்வதை இங்கே யாரும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. இந்தி அலுவல் மொழிகளில் ஒன்றுதான் என்றாலும் மைய அரசு இந்தி மேம்பாட்டுக்காக முன்னுரிமை அளித்து பல கோடி ரூபாய்களை செலவு செய்துகொண்டுதான் இருக்கிறது. மைய அரசும் பல மாநில அரசு அமைப்புகளும் இந்தி கற்றுக்கொடுப்பதில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. தேவை உள்ளவர்கள் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
  ஒரு இந்தியக் குடிமகனாக நான் வெட்கப்பட காரணம் ஏதும் இல்லை. ஆனால் வேட்கை இருக்கவே செய்கிறது - இன்னும் பல மொழிகளைக் கற்க வேண்டும் என்று. மலையாளத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆயுளும் தேவையும் இருந்தால் இன்னும் சில மொழிகளையும் கற்றுக்கொள்ளவும் முடியும்.
  தேவையும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தி கற்றுக்கொள்ள வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அத்தனை பேரும் கட்டாயம் கற்றே ஆக வேண்டும் என்றால்... அது சாத்தியமே இல்லை, தேவையும் இல்லை.

  பின்னூட்ட வரலாற்றில் மிகநீளமான பின்னூட்டம் என்று விருது ஏதும் உண்டா என்று தெரிந்தால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் ஒவ்வொருவரும் புதிதாக ஒரு விசயத்தை ,செய்தியை தினம் தினம் அறிந்துகொண்டேதான் இருக்கிறோம்.... அந்த வகையில் உங்களின் பின்னூட்டத்திலிருந்து நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன்...நிச்சயமாக உங்கள் பின்னூட்டத்தை வைத்து இரண்டு பதிவுகளை போடலாம்...வருகைக்கும்,விளக்கமாக பின்னூட்ட மிட்டதற்கும் நன்றி...நான் எனது பதிவும் முடிவில் இந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா என்றுதான் எழுதி இருந்தேனே தவிர இந்தி தெரியாதவன் இந்தியன் அல்ல என இந்த பதிவில் எங்கும் குறிப்பிடவில்லை....அதை முதலில் தெளிவு படுத்தி கொள்கிறேன்....எந்த பதிவும் எல்லாரையும் திருப்தி படுத்தவோ,ஏற்று கொள்ளவோ முடியாது......எல்லாரும் ஒப்பு கொள்ளும்படி யாராலும் பதிவும் எழுத முடியாது...விமர்சனம் வந்தால்தான் அந்த பதிவுக்கே அழகு...நன்றி

   நீக்கு
  2. ஷஜஹான் ஐயா,

   இதைவிட யாரும் தெளிவானதொரு விளக்கம் கொடுக்கவியலாது.

   மைதீன்,

   //எந்த பதிவும் எல்லாரையும் திருப்தி படுத்தவோ,ஏற்று கொள்ளவோ முடியாது......எல்லாரும் ஒப்பு கொள்ளும்படி யாராலும் பதிவும் எழுத முடியாது//

   உங்களுடைய ஹிந்தி பற்றிய புரிதல் பிழையாக இருக்கும்போது, மற்றவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஒப்புக்கொள்வார்கள்?

   நீக்கு
 19. இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது மலேசியாவிலும் வளைகுடாவிலும் போய் அண்டிப் பிழைப்பவர்களுக்கு மட்டுமே இந்தி தெரியாமல் இருப்பது சிரமமாக இருக்கிறதே ஒழிய இந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கு அல்ல. நானும் அடிக்கடி வட இந்தியாவிற்கு சென்று வருபவன்தான். இதுவரை இந்தி கற்றுக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டதே இல்லை. தமிழ் நாட்டிலேயே தெருவுக் தெரு இந்தி பிரசார சபாக்களும் இந்தி ட்யுஷன்களும் எடுக்கப் படுகின்றன. தேவைப் படுபவர்கள் சென்று படித்து புலமை பெற்று மானமிகு இந்தியனாக உலகை வலம் வரலாம். அதை விடுத்து இந்தித் திணிப்பை எதிர்த்து உயிர்விட்ட தியாகிகளை கொச்சைப் படுத்துவதுபோல் கருத்துக்களை எழுத வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 20. லூசு பயலுவளுக்கு ஆயிரம் தடவ சொல்லியாச்சு இந்தியாவுக்கு தேசிய மொழியே கெடயாதுன்னு.அப்புறமும் இந்தியாவின் தேசிய மொழி இந்தி.அத கண்டிப்பா படிக்கணும்.படிச்சுட்டு ..ர புடுங்கணும்னுட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தியை கட்டாயம் படித்தே தீர வேண்டும் என இந்த பதிவில் எங்கு சொல்லி இருக்கிறேன்....எனக்கு நேர்ந்த அனுபவத்தை பதிவாக எழுதி உள்ளேனே தவிர கட்டாயம் படி, படிச்சாதான் இந்தியன் என்று எங்கு நான் குறிப்பிட்டுள்ளேன்?சும்மா வை புளித்ததோ மாங்கா புளித்ததோ என பேச கூடாது

   நீக்கு
  2. மைதீன் சார் உங்கள் எண்ணம் புரிகிறது.எழுத படிக்க தெரியாவிட்டாலும் கூட நான் ஓரளவு நன்றாகவே இந்தி பேசுவேன்.விபரம் தெரிந்த பலரும் கூட இந்தி இந்தியாவின் தேசியமொழி என்று சொல்வதாலேயே அந்த கடுமையான வார்த்தை பிரயோகம்.வலை பதிவை தொடங்கிய பின் நான் எழுதிய http://www.sekkaali.blogspot.com/2011/01/blog-post.html முதல் பதிவே இது பற்றியது தான்.நேரமிருந்தால் இதனையும் இறுதியில் உள்ள தொடர்புடைய பதிவையும் படித்து பாருங்களேன்.

   நீக்கு
 21. //தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன் ஆக முடியாதோ அது போல இந்தி தெரியாதவன் இந்தியனாக இருக்க முடியுமா//.
  இந்தி தெரியாதவன் எல்லாம் இந்தியன் அல்ல என்று இந்திய அரசாங்கத்தால் அறிவிக்க முடியுமா?

  பதிலளிநீக்கு 22. http://www.thehindu.com/news/national/article94695.ece
  http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi

  பதிலளிநீக்கு
 23. ஆனால் இதில் இந்திதான் பெரும்பாலான இடங்களில் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது....உடன்பாடு இருந்தாலும் இல்லை என்றாலும் இதை ஏற்றுதான் ஆக வேண்டும்....//

  ஆங்கிலமும்தானே? ஆங்கிலம் இங்கே பள்ளிகளிலேயே கற்றுத் தரப்படுகிறதே?

  ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அலுவல் மொழியை அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பேசுவான்....அறிந்து இருப்பான்...//

  தமிழ்நாட்டில் தமிழை மதிக்கும் அனைவரும் தமிழை அறிந்துவைத்துள்ளார்கள்.

  நான் வேலை பார்க்கும் மலேசியாவின் அலுவல் மொழி மலாய் மொழி....மலேசியாவில் சீனர்கள், இந்தோனோசியர்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் அனைவரும் மலாய் மொழி பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்....
  //
  தவறே இல்லை, ஆனால் யாரோ சிலர் மலேசியா சென்று செட்டில் ஆவதற்காக ஒட்டுமொத்த சீனர்களுக்கும், இந்தோனேசியர்களும் கண்டிப்பாக மலாய் படிக்க வேண்டும் என்பது நியாயமா??

  இந்தியாவின் மொழி இந்திதானே..அப்புறம் எப்படி தெரியாது என்கிறீர்கள் ? என்றார்....//

  இனிமேல் இல்லை என்று சொல்லி விளக்குங்கள்.

  என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை மவுனத்தையே அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...//

  மவுனம் தேவையில்லை. உங்கள் தாய்மொழி தமிழ். இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று பதில் சொல்லுங்கள்.

  நாம் இனத்தால் தமிழன் ஆனாலும் ஒரு குடிமகனாக மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை தமிழர்களான நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?
  ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய விசயம் அல்லவா ?

  //
  இந்தியாவின் தேசிய மொழி என்று ஒரு மொழியும் இல்லை. எனவே தமிழர்கள் அதை சரளமாக எழுதப் படிக்கத் தெரியாததால் வெட்கப்படத்தேவையில்லை. எப்படி நமக்கு மாண்டரின், சமஸ்க்ருதம், ருஷ்ய, ப்ரென்ச்சு மொழிகள் தெரியாதோ, அதற்காக நாம் வெட்கப்படவில்லையோ அதே போன்றுதான் ஹிந்தியும்.

  ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கற்று தராமல் போனதற்கு நம் சுயநல அரசியல்வாதிகள்தானே காரணம்?தமிழ் ,தமிழ்நாடு என சொல்லி ஒட்டு பிச்சைக்காக அரசியல் நடத்திய அயோக்கிய அரசியல்வாதிகள்தானே இதற்கு காரணம்...?//

  உங்களின் தாய் மொழியான தமிழையும், அண்டை மக்களுடன் பேசுவதற்கு இணைப்பு மொழியாக ஆங்கிலத்தையும் அரசாங்கம் இலவசமாகக் கற்றுத் தருகிறது. ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்த்தார்கள். எங்குமே ஹிந்தி கற்பதையோ கற்பிக்கப் படுவதையோ நீங்கள் ஓட்டுப் பிச்சை எடுத்ததாகச் சொல்லும் அரசியல்வாதிகள் எதிர்க்கவே இல்லை. சொல்லப்போனால் உங்களின் தாய் மொழி திணிப்பாளர்களிடமிருந்து காக்கப்பட்டது.

  இன்றைக்கு தொடர்பு மற்றும் வியாபார நிமித்தமாக நாம் கற்ற ஆங்கிலத்தால் தமிழ் படும் பாடுகளை தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பாளர்களின் வாயிலாகக் கேட்கிறீர்கள்தானே? இதில் ஹிந்தியும் திணித்தால் தமிழ் என்னவாகும்? உங்கள் மொழி உங்களால் கொல்லப்படுவதுதான் நீங்கள் அதற்குச் செய்யும் கைமாறா? இதுதான் உங்கள் தாய் மொழிப் பற்றா? இங்கே யார் அயோக்கியர்கள்??

  இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை நான் குறை கூறவில்லை ....ஆனால் ஒரு மொழியாக ஆங்கிலத்தை நமக்கு பள்ளிகளில் கற்று தந்ததை போல இந்தியை ஏன் கற்று தரவில்லை?இந்தி திணிப்பை எதிர்த்து இருக்கலாம்...இந்தி தெரிந்து கொள்வதையுமா எதிர்ப்பது?//

  நம் நாட்டிலிருந்து அதிகமாக வேலை நிமித்தம் அரபு நாடுகளுக்குத்தான் மக்கள் பயணிக்கிறார்கள் நியாயமாக அரபிதான் கற்றுத்தரச் சொல்லி இருக்கவேண்டும் நீங்கள் ஏன் ஹிந்தி?? உங்களைச் சந்திக்கும் அந்த தமிழ் அறியா இந்தியர் ஏன் ஆங்கிலமோ தமிழோ கற்கவில்லை என்று நீங்கள் ஏன் நினைக்கவே இல்லை?? ஒரே ஒரு மொழி கற்ற ஒரு சோம்பேறியுடன் உரையாட நீங்கள் மூன்று மொழி கற்கவேண்டுமா? என்ன கொடுமை சார் இது??

  //உலகின் பன்மையான மொழியான தமிழை பேசுவதால் பெருமை அடையும் அதே வேளையில் நம் நாட்டின் தேசிய மொழியான இந்தியை தெரியாததால் நிச்சயம் கவலையும் அடைய வேண்டும்....

  தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன் ஆக முடியாதோ அது போல இந்தி தெரியாதவன் இந்தியனாக இருக்க முடியுமா?பதில்தான் தெரியவில்லை....//

  மேலே சொன்ன பதில் போது்மா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

  பல முறை விவாதிக்கப்பட்டாலும் உங்களைப் போல பலர் இன்னும் இந்தக் குழப்பத்திலேயேதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எவரும் எந்தமொழியையும் கற்கலாம் தடையே இல்லை. தேவை என்றால் கற்றுக்கொள்ளுங்கள். ஹிந்தி தெரியாததால் என்று மீண்டும் ஆரம்பிக்காதீர்கள். நன்றி. வணக்கம் :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெளிவான விளக்கம் ஷங்கர். இதுக்கு மேல எந்த விம் பாரும் போட்டு விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 24. தமிழர்களுக்கு இந்தி தேவை என்று சொல்வதே பெருங்குற்றம். உங்களை மாநில பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....