10 ஜூன் 2011

பதிவர்களை வம்புக்கு இழுத்த சுஹாசினி....
இணையதள எழுத்தாளர்களை கேட்பாரில்லை ,சொல்வாரில்லை, கட்டுப்பாடு இல்லை, ஒரு கணினி கிடைத்து விட்டால் தங்களை மேதாவிகளாக ,விமர்சகர்களாக நினைத்துகொண்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கின்றனர்...மொத்தத்தில் இணையத்தளம் வக்கிரத்தின் வடிகாலாக மாறிவிட்டது....

என்னைய திட்டாதிங்க நண்பர்களே....இது நான் எழுதியது அல்ல....

திரை உலக மகா அறிவாளியும், தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகையாக தன்னை நினைத்து கொண்டு மற்றவர்களை மட்டம் தட்டும் சுகாசினிதான் இவ்வாறு நம்மீது ( ஹி ஹி ..நானும் எழுத்தாளர்னு சொல்லிகிட்டாச்சு....) பாய்ந்து இருக்கிறார்....அவருக்கு முதலில் எனது கடும் கண்டனங்கள்.....

இவருக்கும் பதிவர்களுக்கும் என்ன பகை?ஆயிரகணக்கான பதிவுகள் குவியும் இடத்தில் சில பதிவுகள் ஆபாச பதிவுகளாக ,அருவெறுப்பு கலந்த எழுத்துக்களாக இருக்கலாம்...அதற்காக பதிவிடும் எல்லா எழுத்தாளர்களையும் குறை சொல்வதா?

பதிவுலகில் இல்லாத விசயங்களே இல்லை...அறிவியலிலிருந்து ஆன்மிகம் வரை, கதைகளிலிருந்து கவிதைகள் வரை, பொழுது போக்கிலிருந்து புது கண்டுபிடிப்புகள் வரை எழுத்துக்களாக மலை போல குவிந்து இருக்கும் இடத்தில் நீங்கள் குப்பையை தேடினால் அது உங்கள் தவறே....

கணினியில் எழுதினால் அவர்கள் மேதாவிகள் ...எழுதாத நீங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று எண்ணுவது உங்களின் தவறுதானே தவிர எங்களின் தவறு அல்ல..


நீங்கள் மட்டும் ஒரு டிவி சேனல் கிடைத்துவிட்டால் எல்லா படங்களையும் சகட்டுமேனிக்கு விமர்சிக்கலாமா?உங்களின் விமர்சனங்களை விட எங்கள் பதிவுலகின் விமர்சகர்கள் நூறு படி மேலேதான்.....அண்ணன் சி பி செந்தில்குமாரின் விமர்சனம் ஒரு உதாரணம்..

இன்றைய சினிமாவில் தொடையும்,தொப்புளையும் காட்டாத சினிமா ஏதாவது உண்டா?அப்ப எல்லா சினிமாவையும் தடை செய்யலாமே?

நீங்கள் கூட லோ ஹிப் சேலையில் தானே வலம் வருகுறீர்கள்? உங்கள் பார்வையில் அது தப்பில்லை...அதுபோல எல்லாவற்றையும் சரியாக பாருங்கள்...பார்ப்பவர்களின் பார்வையை பொறுத்ததுதான் சரியும் தவறும்....

இங்கு மாங்கு மாங்குன்னு நாங்க எழுதுறது உங்களை திருப்திபடுத்த அல்ல...எங்களின் திருப்திக்காக ....

உங்கள் கூற்றுப்படி நாங்கள் மேதாவிகளாகவே இருந்துவிட்டு போகிறோம்....மேதாவிகளை கண்டால்தான் அறிவீனர்களுக்கு ஆகாதே....

09 ஜூன் 2011

சபாஸ் ஜெ...தமிழ் சினிமாவில் சுஸ்மா சுவராஜ்...(கதம்பம்)ராஜபக்சேவை போர்குற்றவாளி என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்தியா வலியுறுத்தவேண்டும் எனவும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெ க்கு பாராட்டுக்கள்....

இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லைதான்...ஆனால் இந்த ஒரு தீர்மானத்தை கூட தமிழர்களுக்காக கருணாநிதி சட்டசபையில் நிறைவேற்றவில்லை....
அந்த வகையில் ஜெ செய்தது பாராட்டத்தக்கதே....

கனிமொழிக்கு நேற்று ஜாமீன் கிடைக்கததால் திமுக உயர்நிலை குழு கூட்டத்தை அவசரமாக கூட இருக்கிறது.....கனிமொழிக்காக இக்குழு கூடுவது இது இரண்டாவது முறை....அண்ணா ஆரம்பித்த கட்சி ....ஹ்ம்ம்....என்ன பண்ணுவது...இப்போது அண்ணா உயிர் பெற்று வந்தால் முதல் வேலையாக திமுகவை கலைத்து விட்டுதான் மறு வேலை பார்ப்பார்....

உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ராம்தேவ் அடிக்கடி கிச்சு கிச்சு மூட்டி கொண்டு இருக்கிறார்....போலிசிடமிருந்து தப்பிபதற்காக சல்வார் கமீஸில் ஒளிந்த அவர் அதே வேடத்தில் பேட்டி கொடுத்தது பம்பர் காமெடி.....ராம்தேவ் பல்லாயிரம் கோடிகளை குவித்து இருக்கிறார் என இவர் மீது குற்றம் சொல்லும் மத்திய அரசு ஆரம்பத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?
அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது ஏன்?

இப்போது என்னடான்னா ராம்தேவ் புரட்சி படையை உருவாக்க போகிறேன் என்று தெலுங்கு பட வசனங்களை பேசி மத்திய அரசுக்கு வெறியூட்டி வருகிறார்....இதுதான் கிறுக்கு பய ஊரில் கேனப்பய நாட்டாமை பண்ணுவது என்ற பழமொழிக்கு அர்த்தமோ?

தேச பக்தி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சுஸ்மா சுவராஜ் பட்டையை கிளப்பி உள்ளார்..தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடுவதில் தவறு இல்லையாம்....கொஞ்சம் உசாரா இருங்க மேடம்...இல்லாவிடில் தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடுவதற்கு தூக்கி கொண்டு வந்துவிடுவார்கள்.....ஏன்னா இப்ப இங்கே ஆன்ட்டிகளின் நடனம்தானே லேட்டஸ்ட் டிரன்ட் ....

சிபிஐ விசாரணை வளையத்தில் தயாநிதி மாறன் சிக்கியுள்ள செய்திகள் வெளிவரத் துவங்கியதிலிருந்து சன் டிவியின் பங்குகள் மதிப்பு சடசடவென சரிய ஆரம்பித்துள்ளதாம்...
ஆனால் தயாநிதி மாறன் விவகாரத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என சன் டிவி அறிவித்துள்ளது.....அப்பறம் என்ன எழவுக்கு பங்குகள் சரிந்தது என கே டி பிரதர்களுக்கே வெளிச்சம்...

07 ஜூன் 2011

கே டி பிரதர்ஸின் மோடி வித்தைகள்....


கருணாநிதி குடும்பத்தில் அடுத்ததாக திஹார் சிறைக்கு சுற்றுலா செல்ல கே டி பிரதர்ஸின் சார்பாக தயாநிதிமாறன் போவதற்கு வாய்ப்பு அதிகரித்து உள்ளது...

ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் விற்குமாறு அதன் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டினார் என்பதுதான் தயாநிதிமாறன் மீதான குற்றசாட்டு..

சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம்.

இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது சினிமாவில் வில்லன்கள் செய்வதுபோல இருக்கிறதுதானே?....என்ன ஒரு ஜெகஜ்ஜாலத்தனம்...?இதுமட்டுமல்லாமல் தனது வீட்டில் உள்ள (சென்னையில்) பி எஸ் என் எல் தொலைபேசி இணைப்பை சன் டிவி க்கு திருட்டுத்தனமாக பயன்படுத்தினார் என்றும் ஒரு பூதம் கிளம்பி உள்ளது...

பதவியும்,பணமும் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு இப்போது திஹார்தான் வாடகை இல்லாத இருப்பிடம் என்பதை நீதித்துறை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வேண்டும்...

06 ஜூன் 2011

மத்திய அரசே காரணம்...அழுது பாய்ந்த கருணாநிதி...


திமுகவின் தோல்விக்கு பிறகு திருவாரூரில் மீண்டும் வழக்கம்போல ஒரு பிரமாண்ட ! பொதுக்கூட்டத்தை நடத்தினார் கருணாநிதி....

தனது வெற்றிக்காக நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் மகள் கனிமொழிக்காக கூப்பாடு போட்டுள்ளார்....

ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். (நம்ம தமிழ்நாட்டிலும் அப்படிதானே இருக்கு)அப்படிப்பட்ட இடத்தில், அந்த திஹார் சிறையில் இருக்கிறார் என் மகள் கனிமொழி. ( உங்க மகளுக்காக சிறையை பூங்காவனமாக மாற்றவா முடியும் ?) இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்....( நேரடியாக மத்திய அரசை இப்போதுதான் குற்றம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்)

என்னைப்பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. ( எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணினா அப்படித்தான்) இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.( ஹி...ஹி ...சும்மா காமெடி பண்ணாதிங்க..உங்க குடும்பமே போதுமே...)

எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். ( ஆஹா அடுத்த வாரிசா?)அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது. (அப்ப உறுதியா அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொல்லுங்கள் )செல்வியோடு, கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். (அதனால்தான் திமுக தோற்றது என இவருக்கு யார் புரியவைப்பது?)


கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். (அப்ப நீங்களும் சிறை செல்ல தயாரா?) கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.(உங்கள் மகள் என்பதே ஒரு ஆதாரம்தானே !என்ன கொடுமை சார்...)

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.( யார் தவிர்ப்பார்? ஒரே குழப்பமா இருக்கே )

இறுதியில் ஜெயலலிதா சந்தோசப்படும் விசயமும் நடந்தது....கனிமொழியை பற்றி பேசும்போது அழுதுவிட்டாராம் கருணாநிதி....இப்ப அழுது என்ன புண்ணியம்?

05 ஜூன் 2011

உலகை வியக்க வைத்த விஜயகாந்த்...


வாரம் ஒரு தடவை நம்ம கேப்டனை பற்றி பதிவிடாமல் விட்டால் அது எதிர்க்கட்சிதலைவருக்கு நாம் செய்யும் துரோகமல்லவா?

பொதுவாக நம்ம கேப்டன் சண்டை போடுவதில் கில்லாடி....இரண்டு கால்களால் அவர் இறநூறு பேரை அடிக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம்.....

ஹாலிவுட்டில்கூட இல்லாத ஸ்டைலில் சண்டை போடுவதுதான் நம்ம கேப்டன் பாணி....

கேப்டன் கையால் அடித்து பார்த்து இருப்போம்....காலால் உதைத்து பார்த்து இருப்போம்....ஆனால் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தால் அது உலக மகா குற்றமல்லவா?இதோ கேப்டனின் அகில உலகத்தையும் வியக்க வாய்த்த ஒரு சண்டைக்காட்சி....இது சும்மா சாம்பிள்தான்....

எப்பூடி?

04 ஜூன் 2011

உண்ணாவிரதத்தை தொடங்கினார் பாபா....ஊழலே வேண்டாம் போ போ...


ஆயிரக்கணக்கானோருடன் டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிரான தனது சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை யோகி பாபா ராம்தேவ் இன்று காலை தொடங்கினார்.

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். ஊழலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக ராம்தேவ் அறிவித்தார்.

இதை ஆரம்பத்தில் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால் ராம்தேவின் போராட்ட அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆதரவும் பெருகியது.


இதையடுத்து இன்றுகாலை திட்டமிட்டபடி தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ராம்தேவ். இதற்காக நேற்றே ஆயிரக்கணக்கானோர் ராம் லீலா மைதானத்தில் குவிந்து விட்டனர்.

அவருடன் பெண் சாமியார் ரிதம்பரா, சீக்கிய, ஜைன மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு, யோகாசனம் மற்றும் பஜன் ஆகியவற்றை நிகழ்த்தினார் ராம்தேவ். பின்னர் கூட்டத்தினரிடையே அவர் பேசுகையில், நம்மால் முடியாதது ஏதும் இல்லை. எல்லாமே சாத்தியமானதுதான். நாம் தோல்வி அடையப் போவதில்லை. இந்த நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும். நாட்டை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து மீட்க வேண்டும். ஏழைகளிடமிருந்து பசியையும், பட்டினியையும், பஞ்சத்தையும் விரட்ட வேண்டும் என்பதே நமது நோக்கம்.

இங்கு கூடியிருக்கும் யாரும் காசு கொடுத்து கூட்டி வரப்பட்டவர்கள் இல்லை. அனைவரும் தாங்களாகவே வந்துள்ளனர். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள்தான் இங்கு கூடியுள்ளனர். இந்த போராட்டம் வெல்லும் என்றார்.


மேலும் தனது உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று அனைத்துக் கட்சிகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனக்கு எந்தக் கட்சி வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்க வரலாம், ஆனால் மேடையில் வந்து அமரவோ, அதன்மூலம் எனக்கு அரசியல் சாயம் பூசவோ முயலக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் மிகவும் வரவேற்கபடவேண்டிய ஒன்று...ஆனால் இது வெறும் பரபரப்புக்காகவும், விளம்பரத்துக்காகவும் ஆகிவிடக்கூடாது....இதுமாதிரி நம் தமிழ்நாட்டில் இருந்து யாரும் புறப்படாதது வேதனை அளிக்கிறது...

எதிர்கட்சியான பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்த வேறு வழிகள் ,வாய்ப்புகள் இல்லாத நிலையில் இம்மாதிரி போராட்டங்கள் லக்கி ஜாக்பாட்....அவர்கள் இதை தங்கள் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவார்களே தவிர தீர்வுக்கு ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதே உண்மை....

அன்னா ஹசாரேவின் போராட்டத்தோடு இதை ஒப்பிட முடியாது....அவர் கோடி கோடியாக சொத்துக்கள் இல்லாதவர்....சமுக சேவைகளில் ஈடுபட்டவர்...ஆனால் பாபாவுக்கு சொத்துக்கள் அதிகம்...கோடிகள் ஏராளம்...

இருந்தாலும் வீதிக்கு போராட வந்தது பாராட்டத்தக்கதே....

ஊழலே போ போ என சொல்லும் பாபாவுக்கு ஆதரவு அளித்து நமது பங்கினை சிறிதளவாவது வெளிப்படுத்துவோம்...

03 ஜூன் 2011

கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து....கேபிள் டிவி அரசுடமை...அதிரவைக்கும் ஆளுநர் உரை....தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள 14வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை அவை கூடியதும் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தனது உரையை தொடங்கினார்.

ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்....


11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.(அப்ப கல்லூரி மாணவர்களுக்கு?)

- கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதில் புதிய பொது மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.( அதற்கு ஜெயா காப்பீட்டு திட்டம் என பெயர் வைக்காமல் இருந்தால் சரி...)

- விலைவாசியைக் கட்டுப்படுத்த பொது விநியோகத் திட்டம் வலுப்படுத்தப்படும். கள்ளச்சந்தை, பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்பட்டு சென்னையில் மட்டுமே இனி அண்ணா பல்கலைக்கழகம் இயங்கும்.


- எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வரப் போவதில்லை.

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இலவச மிக்சி கிரைண்டர் வழங்கப்படும்.( அப்ப ஆடு மாடுலாம் எப்ப?)

- அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் 9.12 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.

- சமச்சீர் கல்வித் திட்டம் செம்மையாக்கப்படும். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான பரிந்துரையை அளிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்.

- சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுதல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதே முதன்மைப் பணி.( என்கவுன்டர் லிஸ்ட் ரெடி பண்ணிவிட்டார்களோ ?)

- மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 1000லிருந்து ரூ. 2000 வழங்க உத்தரவு.

- மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 6ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


- மரபு சாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி செய்ய தனிக் கொள்கை வகுக்கப்படும்.

- 500க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலகள் அமைக்கபபடும்.

- பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தனியார் கேபிள் டிவி சேவை அரசுடமையாக்கப்படும்...( சன்னுக்கு டின்னு கட்டியாச்சா?)

- சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்படும்.


- தமிழ்நாடு 2025 தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்படும்.( அப்துல் கலாம் ஐடியாவா?)

- தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 மாதத்திலிருந்து 6 மாதமாக உயர்த்தப்படும்.

- நீதிமன்றத்தில் தமிழை பயன்படுத்த வலியுறுத்தப்படும்.(இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வலியுறுத்தி கொண்டே இருப்பார்கள்?)


புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுவரை நடந்த கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும்.( ஒரிஜினல் அம்மா ஸ்டைலை காட்டிவிட்டாரே ஜெ)

- சென்னையில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக 111 கிலோமீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படும்.
தற்போது நடந்து வரும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிய கால தாமதமாகும் என்பதால் மோனோ ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது. படிப்படியாக இது 300 கிலோமீட்டர் தொலைவுக்கு அதிகரிக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோமீட்டருக்கு மட்டுமே அமல்படுத்தப்படும்.

- மதுரை, கோவை, திருச்சியிலும் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.( முதலில் சென்னையில் முடிங்கப்பா...)

ஓகே ஓகே....தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவு செயல்படுத்தி விடுவார் ஜெயலலிதா என மக்களை நம்ப வைக்கும் விதத்தில் ஆளுநர் உரை அமைந்துள்ளது...பார்ப்போம்

02 ஜூன் 2011

சீமான் காதலித்து ஏமாற்றினாரா?


நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார்.

சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் விஜயலட்சுமி நேற்று மாலை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதியை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில், இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தும்படி வளசரவாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்திற்கு தென் சென்னை இணை ஆணையர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாக பிரபலமானவர்களை பற்றி இதுமாதிரி புகார்கள் வருவது சகஜம்தான்....ஆனால் புகார் அளித்தவரும் ஓரளவு அறியப்பட்ட நடிகை ஆவார்...இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என இனிதான் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகள் எழுதும்....சீமான் இன்னும் இதுபற்றி வாய் திறக்கவில்லை....

ஆனால் சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நடிகை விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர இரு‌ப்பதாக ‌அவரது வழ‌க்க‌றிஞ‌ர் ச‌ந்‌திரசேக‌ர‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்...சீமான் திமுகவை எதிர்த்தவர்....அதிமுக ஆட்சி அமைய விரும்பியவர்........ ஒருவேளை இது வேண்டுமென்றே சொல்லப்படும் குற்றச்சாட்டாக இருந்தால் சீமான் கடுமையாக எதிர்த்த திமுக ஆட்சியில் அல்லவா இது நடந்திருக்க வேண்டும்?

பார்ப்போம் சீமான் மீதான இவ்வழக்கு சீறி பாய போகிறதா? அல்லது புஸ்வானமாக போகிறதா என்று....

ஆனால் மீடியாக்களுக்கு இனி நல்ல தீனிதான்...பதிவுலகுக்கும்தான்....

01 ஜூன் 2011

மரியம் பிச்சையை கொச்சை படுத்திய வினவு..


அமைச்சர் மரியம்பிச்சையை பற்றி வினவு எழுதியிருந்த ஒரு பதிவை படித்தேன்....

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் இறந்தவரை பற்றி எழுதியுள்ளது வினவு....

மரியம் பிச்சை ஒரு ரௌடியாம்....கள்ளசாராயம் காய்ச்சிதான் முன்னுக்கு வந்தாராம்....சப் இன்ஸ்பெக்டர் மனைவியையே கள்ளகாதலியாக வைத்துகொண்டாராம்....

இது மாதிரி விமர்சனங்கள் அரசியல்வாதிகளை பற்றி வருவது இயல்புதான்....அவர் மீதான விமர்சனம் சரியா தவறா என்று பார்ப்பதைவிட இறந்துவிட்ட அதுவும் கோரமான விபத்தில் இறந்து தமிழ்நாடு முழுவதும் அனுதாபத்தை ஏற்படுத்திய ஒருவரை பற்றி இம்மாதிரி தரக்குறைவாக வினவு எழுதலாமா?

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் தனிப்பட்ட குணாதிசயங்கள் முறையில் பார்த்தால் நல்லவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்....அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நல்லது செய்தார்களா கெடுதல் செய்தார்களா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர அவரை தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக விமர்சித்தது எந்த விதத்தில் நியாயம்?


திருச்சியில் நேரு குருப்பினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மரியம் பிச்சையின் வெற்றியை தங்கள் வெற்றியாக கருதினார்கள்....திருச்சியில் எந்த இடம் யார் வாங்கினாலும் நேரு குருப்புக்கு கப்பம் கட்ட வேண்டும்....தில்லை நகர் முழுக்க நேரு நகர் ஆகிவிட்டது...நேருவை மிஞ்சி திருச்சியில் யாரும் ஏதும் செய்ய முடியாது...

அப்படிப்பட்ட சர்வபலம் பொருந்திய நேருவை வீழ்த்தி மரியம் பிச்சை அமைச்சரும் ஆகி விட்டதால் இனி அம்மாதிரி நிலைமைகள் ஏற்படாது என பொதுமக்கள் சந்தோசமாக இருந்தனர்...இந்நிலையில் திடிரென விபத்தில் இறந்த மரியம் பிச்சையின் இழப்பை திருச்சி மக்களால் ஜீரணிக்க முடியாமல் கடைகளை அடைத்து துக்கம் கடைபிடித்தனர்.....


அதையும் ஆளும்கட்சியினர் மிரட்டித்தான் செய்யவைத்தனர் என வினவு கூறியுள்ளது மக்களின் உணர்வுகளை கொச்சை படுத்துவதாகும்....

இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்கள்....வினவு எழுதியது சரியா?