06 ஜனவரி 2013

அது என்ன "போபர்ஸ் ஊழல்"?.....ராஜீவ் காந்தியின் மீதுஇன்று வரை துடைக்க முடியாத  களங்கமாக சொல்லப்படுவது போபர்ஸ் ஊழல் புகார்தான்.....இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை கணக்கில்  கொண்டால்  64 கோடி ஊழல்  குற்றம் சாட்டப்பட்ட அன்றைய போபர்ஸ் ஊழல் கொசு போலதான் இருந்தாலும் அந்த காலத்தில்  அது பெரிய தொகையாகவே பார்க்கப்பட்டது....

அந்த போபர்ஸ் ஊழல் புகாரைபற்றி ஒரு பிளாஷ்பேக்....

 அந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தி, ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று பெயர் பெற்றிருந்தார். "திருவாளர் பரிசுத்தம்" ("மிஸ்டர் கிளீன்") என்று அவர் வர்ணிக்கப்பட்டார். இந்நிலையில், 1986 தொடக்கத்தில், அவருடைய நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் வகையில் "போபர்ஸ் ஊழல் புகார்" விசுவரூபம் எடுத்தது. "போபர்ஸ்" என்பது, சுவீடன் நாட்டில் உள்ள ஆயுத தயாரிப்பு கம்பெனியின் பெயர். 

இந்த நிறுவனம் பீரங்கிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. "போபர்ஸ்" நிறுவனத்திடம் இருந்து ரூ.1,700 கோடிக்கு பீரங்கிகள் வாங்க இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1986 மார்ச் 24-ந்தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987 ஏப்ரல் 16-ந்தேதி சுவீடன் நாட்டு ரேடியோவின் செய்தி அறிக்கையில், திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. 

போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும், "லோட்டஸ்" ("தாமரை") என்ற பெயரில் சுவிஸ் பாங்கியில் ரூ.64 கோடி போடப்பட்டுள்ளது என்றும், இது இந்தியப் பிரமுகர் ஒருவருக்கான லஞ்சப்பணம் என்றும் சுவீடன் ரேடியோ கூறியது. இச்செய்தி இந்தியாவில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது. "ராஜீவ்" என்றால் இந்தியில் தாமரையைக் குறிக்கும். 

எனவே, "லோட்டஸ்" என்பது ராஜீவ் காந்தியைத்தான் குறிப்பிடுகிறது என்று, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல பத்திரிகைகள் எழுதின. "ராஜீவ் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை ராஜீவ் காந்தி மறுத்தார். "போபர்ஸ் பீரங்கி பேரத்தில், இடைத்தரகர் எவரும் இல்லை" என்று, சுவீடன் நாட்டுப் பிரதமராக இருந்த பால்மே கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். 

(ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே, பால்மே கொலை செய்யப்பட்டார்.) ராஜீவ் காந்தி எவ்வளவோ மறுத்தும், "போபர்ஸ் ஊழலுக்கு இதோ ஆதாரம்" என்று பல பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தன. 

பிரபல இந்தி நடிகரும், ராஜீவ் காந்தியின் நண்பருமான அமிதாப்பச்சன், அவர் சகோதரர் அஜிதாப்பச்சன், இத்தாலிய தொழில் அதிபரும், ராஜீவ் காந்தியின் நண்பருமான ஒட்டாவியோ குவாட்ரோச்சி, சாமியார் சந்திராசுவாமி, இந்தியாவில் உள்ள போபர்ஸ் ஏஜெண்ட் வின்சதா ஆகியோருக்கும் போபர்ஸ் ஊழலில் பங்குண்டு என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதன் விளைவாக ராஜீவ் காந்தியை கலந்து ஆலோசிக்காமலேயே அமிதாப்பச்சன் "எம்.பி." பதவியை ராஜினாமா செய்தார். ராணுவ இலாகா ராஜாங்க மந்திரியும், ராஜீவ் காந்தியின் உறவினருமான அருண்சிங் பதவியை விட்டு விலகினார். இதனால் எல்லாம் போபர்ஸ் ஊழல் பற்றிய கூக்குரல் அடங்கவில்லை. 

எனவே பாராளுமன்ற குழு ஒன்றை அமைத்து, இந்த ஊழல் புகார் பற்றி விசாரணை நடத்துவது என்று பாராளுமன்றம் முடிவு செய்தது. ராஜீவ் காந்தி மந்திரிசபையில் வி.பி.சிங் ராணுவ மந்திரியாக பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பு வி.பி.சிங் நிதி மந்திரியாக இருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த "பேர்பாக்ஸ்" என்ற துப்பறியும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். 

அதாவது "வெளி நாட்டு பாங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் யார்-யார்?" என்பதை கண்டறிய இந்த நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்த விவகாரம் காங்கிரசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் கிளப்பப்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். 

இதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. போபர்ஸ் பிரச்சினை காரணமாக, ராஜீவ் காந்திக்கும், வி.பி.சிங்குக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. 

இதன் காரணமாக 12-4-1987-ல் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டது. வி.பி.சிங்குக்கு பதிலாக கே.சி.பந்த் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டார். போபர்ஸ் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கும் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. 

இதன் காரணமாக ராஜீவ் காந்தியை டிஸ்மிஸ் செய்ய ஜெயில்சிங் ரகசியமாக திட்டமிட்டார். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை "டிஸ்மிஸ்" செய்வது சரியல்ல என்றும், அதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம் என்றும் ஜெயில்சிங்குக்கு ராணுவ அதிகாரிகளும், மூத்த அரசியல்வாதிகளும் ஆலோசனை கூறினர். 

இதற்கிடையே ஜெயில்சிங் பதவி காலம் முடிவடைந்தது. புதிய ஜனாதிபதியாக ஆர்.வெங்கட்ராமன் பதவி ஏற்றார். ராஜீவ் காந்தியை டிஸ்மிஸ் செய்யும் யோசனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நன்றி : காலச்சுவடுகள் 

ஆனால் இந்த ஊழல்  புகாரின் காரணமாகவே 1989 ல் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார்....

பின்பு சி பி ஐ  வசம் சென்ற இந்த வழக்கில் கடந்த 2004 ம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுவித்தது தள்ளி உயர்நீதிமன்றம்....இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துஜா சகோதரர்களும் விடுவிக்கப்பட்டனர்...

அதோடு 2009 ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை முடித்து கொள்வதாக கூறி முற்று புள்ளி வைத்தது சி பி ஐ ....

இன்று வரை உண்மை தெரியாமலே  புதைந்து போன வழக்குகளில் போபர்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல...


1 கருத்து:

  1. ரூ.64 கோடி ஊழலில் இருந்து ரூ.1,76,000 கோடி ஊழல் வரை நம் நாட்டின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது! இது பற்றி முன்பு நான் எழுதிய ஒரு பதிவு
    http://writervijayakumar.blogspot.com/2012/03/blog-post_19.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....