23 நவம்பர் 2010

உன்னத கலைஞன் எம்ஆர் ராதா...

எம்ஆர் ராதாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.....அவரை நமக்கு ஒரு நடிகராகத்தான் அதிகம் தெரியும்......அவரின் மற்ற பண்புகளைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்......

மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.

ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.

அவர்தான் ராதா.....
கொள்கைக்காக எதையும் செய்பவர்......
யாருக்கும் அடிபணியாதவர்.....
தனக்கு எது சரி என படுதோ அதை உடனே செய்பவர்.....
இவரின் ரத்தக்கண்ணீர் படம் தமிழ் சினிமாவின் மைல் கல்.....


நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...

நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.

அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.

இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.

ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.

5 கருத்துகள்:

 1. ரத்த கண்ணீர் படத்தில் அவரின் நக்கல் கலந்த நடிப்பு அவ்வளவு எளிதில் மறக்க கூடியதா?

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......

  பதிலளிநீக்கு
 3. நடிகவேளை பற்றி நான் எழுத நினைத்திருக்கிறேன்... நீங்கள் முந்திக்கொண்டீர்கள்... நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 4. பகடட்ற சுயமரியதைக்காரர். உலகிற்கு தெரியப்படுத்தவேண்டிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....