29 ஜனவரி 2012

அலுவலகத்தில் குட்டி தூக்கம் போடுவது நல்லதாம்..ஆனால்??


அலுவலகத்தில் சிலர் மதியம் ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு கோழி தூக்கம் போட்டால் போதும்;பூஸ்ட் குடித்தது போன்று புத்துணர்ச்சியாகி விடுவார்கள்.(நானெல்லாம் அது மாதிரி இல்லைங்க...ஹி ஹி...) இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான இதுபோன்ற தூக்கம் நல்லது;இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.(அப்படின்னா இதைபின்பற்றலாமோ....)

எனவே இத்தகைய கோழி தூக்கம் போடுபவர்களுக்கு பிரச்சனை இல்லை.(அது என்ன கோழி தூக்கம்...?)ஆனால் இன்றைய அவசர யுக வாழ்க்கையில் பலருக்கு அலுவலகத்தில் மதிய உணவு உண்டதுமே தூக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உடலே காற்று போன டியூப் கணக்காக புஸ்...ஸென்று சக்தி இழந்து சோர்வடைந்து போய்விடும்.அப்படியே மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என தெரியுமா?(எனக்கும் தெரியாதுங்க...படித்துதான் தெரிந்துகொண்டேன்...)

இரவில் ஆழ்ந்த தூக்கமின்மை:

நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள்.(இதுதான் செய்யும் வேலையை நேசிப்பதோ?!)அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார்கள்.இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும்.(பரவாயில்லை....அதான் ஆபிஸ் இருக்கிறதே....ஹி ஹி...)

அதாவது முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும்,உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது.ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், நமது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது.அதனால்தான் மதியம் உடல் சோர்வு ஏற்படுகிறது. (இதுதான் காரணமா? )எனவே ஒருவருக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது.

விளையாட நேரமில்லாமை அல்லது உடற்பயிற்சியின்மை:

ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டு எதுவும் இல்லாமலோ இருந்தால் அவரது உடலில் சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் எரியூட்டப்படாது.காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும்,மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.

நான் படித்ததை பகிர்ந்துள்ளேன்.....முடிந்தால் பின்பற்றலாமே....

1 கருத்து:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....