05 பிப்ரவரி 2012

மனிதன் சந்திரனில் நடந்தான்...!!!உலகம் வியந்த சாதனை

சந்திரனுக்கு இப்போது ராக்கெட் அனுப்புவது ஒரு வியத்தகு சாதனை அல்ல...ஆனால் முதல்முதலாக மனிதன் சந்திரனில் நடந்தது ஒரு மாபெரும் சாதனையே....அதை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா இல்லை இல்லை படிப்போமா என்பதே சரி .......

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சி, மனிதன் சந்திரனுக்குச் சென்று கால்பதித்து நடந்ததுதான். பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சந்திரன். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு, தண்ணீர் முதலியவை அங்கு இல்லை. எனவே, மனிதன் சந்திரனுக்குப்போய் வருவது என்பது நடக்க முடியாத காரியம் என்றே நீண்ட காலமாக எண்ணப்பட்டு வந்தது.


ஆயினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சிகளில், அமெரிக்காவும், ரஷியாவும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டன. விண்வெளிச் சோதனையில், ஆரம்ப வெற்றிகள் ரஷியாவுக்கே கிடைத்தன. வானவெளியில், பூமியைச் சுற்றி முதன் முதலில் விண்வெளிக் கப்பலை ("ஸ்புட்னிக்") பறக்கவிட்டது ரஷியா தான். 1957ம் ஆண்டு அது பூமியைச் சுற்றிப் பறந்தது.


ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ம்ஸ் டிராங் என்ற வானவெளி வீரர்தான் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன். இந்த அதிசயம் 1969 ஜுலை 21ந்தேதி நடந்தது. அன்று அமெரிக்க வான வெளி வீரர்கள் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கினார்கள். சந்திரனில் முதன் முதலாக நடந்த பெருமை ஆர்ம்ஸ் டிராங்கை சாரும்.


16.7.1969 இரவு 7.02 மணிக்கு அமெரிக்காவில் உள்ள கென்னடி முனையில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அதில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோர் இருந்தனர்.


20ந்தேதி:- மாலை 6.30 மணி அளவில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் "தாய் ராக்கெட்"டில் இருந்து, சந்திரனில் இறங்கும் குட்டி ராக்கெட் ("பூச்சி வடிவ வண்டி")டுக்குள் சென்றனர். பிறகு 11.47 மணிக்கு தாய் ராக்கெட்டுடன் இருந்து குட்டி ராக்கெட்டை பிரித்து சந்திரனை நோக்கி பயணமானார்கள். தாய் ராக்கெட்டில் காலின்ஸ் இருந்தார். குட்டி ராக்கெட் 2 மணி நேரம் பறந்து சென்று நள்ளிரவு 1.47க்கு சந்திரனில் இறங்கியது. ஆர்ம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் பூச்சி வண்டிக்குள்ளேயே விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.

21ந்தேதி உலகமே வியக்கும் அதிசயம் நடத்தப்பட்டது. அன்று காலை 8.26 மணிக்கு பூச்சி வடிவ வண்டியின் கதவை திறந்து ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் காலை வைத்தார். நிலாவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர். பிறகு ஆல்ட்ரினும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தார்.

இருவரும் சந்திரனில் சிறிது தூரம் நடந்தார்கள். சந்திரனில் கல், மண் முதலியவற்றை சேகரித்தார்கள். பிறகு சந்திரனில் அமெரிக்க கொடியை நாட்டினார்கள். அதோடு தாங்கள் சந்திரனில் இறங்கியதை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை பதித்தார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் பூச்சி வடிவ ராக்கெட்டுக்கு வந்து தாய் ராக்கெட்டுடன் இணைந்தார்கள். பிறகு பூமியை நோக்கி புறப்பட்டனர்.

24ந்தேதி:-இரவு 10.19 மணிக்கு அந்த ராக்கெட் பத்திரமாக கடலில் வந்து இறங்கியது. உலகமே அவர்களை பாராட்டியது.


நன்றி: தினத்தந்தியின் காலசுவடுகள்...

6 கருத்துகள்:

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....