12 பிப்ரவரி 2012

அதிமுக அரசு டிஸ்மிஸ்....தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி...

என்னடா இதுன்னு யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்..... எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது அவர் ஆட்சி 1980 ல் கலைக்கப்பட்டது.... அது பற்றிய ஒரு பிளாஷ்பேக் செய்திதான் இது....

அப்போதெல்லாம் மத்திய அரசு நினைத்துவிட்டால் தனக்கு பிடிக்காத மாநில அரசுகளை சர்வசாதாரணமாக டிஸ்மிஸ் செய்து வந்தது.....இதற்குமுன் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது அவர் ஆட்சியும் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

1980 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இ.காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்திராகாந்தி பிரதமர் ஆனார். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்திய கீழ்க்கண்ட 9 மாநிலங்களில், ஆளும் கட்சிகள் தோல்வி அடைந்தன. அந்த மந்திரிசபைகளை டிஸ்மிஸ் செய்வது என்றும், சட்ட சபைகளை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்துவது என்றும் மத்திய அரசு முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து கீழ்க்கண்ட 9 மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்டன:_

1. தமிழ்நாடு

2. உத்தரப்பிரதேசம்

3. பீகார்

4. ராஜஸ்தான்

5. மத்திய பிரதேசம்

6. பஞ்சாப்

7. ஒரிசா

8. குஜராத்

9. மராட்டியம்.

மேற்கண்ட 9 மாநிலங்களின் சட்டசபைகளைக் கலைக்கும் உத்தரவில், ஜனாதிபதி சஞ்சீவ ரெட்டி கையெழுத்திட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. (1977 பாராளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது, இ.காங்கிரஸ் ஆட்சி நடந்த 9 மாநில மந்திரிசபைகளை டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.)

எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வெளியானபோது, டெலிவிஷனில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" படம் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்களுடன் அதை எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருந்தார். தன் ஆட்சி கலைக்கப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர்., "சட்டசபை தேர்தலை சந்திப்போம். அதில் நமக்கு வெற்றி உறுதி" என்று கூறியவாறு, எல்லோருக்கும் லட்டு கொடுத்தார்.

1977 தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர். மந்திரிசபை 963 நாட்களே ஆட்சியில் இருந்துள்ளது. ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து, எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:_

"கழகக் கண்மணிகளே! தமிழ்ப்பெருமக்களே! என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே! நாம் எதிர்பார்த்த படி, சட்டத்தின் பெயரால் "அண்ணாவின் அரசு" கலைக்கப்பட்டு விட்டது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கட்டிக் காத்து வந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.

அண்ணா அரசு அழியக் காரணமாக இருந்தவர்கள், மீண்டும் அமைக்கப்பட்ட அரசை அழிக்கத் துணை நின்று சூது சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்ற சத்தியத்தின் குரலை நினைவுபடுத்துகிறேன்.

எனவே, எனது ஆருயிர் உடன் பிறப்புகளே! ஆத்திரப்படாதீர்கள்! ஆவேசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். மீண்டும் தமிழ்நாட்டில் அண்ணாவின் அரசு அமையும். ஒரு அநீதியை முன்னுதாரணம் காட்டி, இன்னொரு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில், அ.தி.மு.க. புடம் போட்ட தங்கமாக மின்னும். நாம் அப்பழுக்கற்ற அண்ணாவின் தம்பிகளாக வெற்றி பெறுவோம். அமைதி. அமைதி. அமைதி. பொறுத்தார் பூமி ஆள்வார். இது பொன்மொழி."

இவ்வாறு அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு இருந்தார்.

எம்.ஜி.ஆர். மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி டெல்லியில் இருந்தார். பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சு நடத்திவிட்டு சென்னை திரும்பினார். அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

நிருபர் கேள்வி:_ அடுத்தது என்ன? தேர்தல் எப்போது வரும்?

கருணாநிதி பதில்:_ தேர்தல் எப்போது வரும் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.

கேள்வி:_ தேர்தலில் இட ஒதுக்கீடு செய்வது பற்றியும், உடன்பாடு பற்றியும் என்ன பேசினீர்கள்?

பதில்:_ தி.மு.க_இ.காங்கிரஸ் உறவு குறித்து பிரதமர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்த பேச்சு வார்த்தை மகிழ்ச்சிகரமாக அமைந்தது. தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் என்ன முடிவு என்பதை இப்போது அறிவிப்பதற்கு இல்லை.

கேள்வி:_ தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து, இங்குள்ள தோழமை கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டு விட்டதா?

பதில்:_ தி.மு.க., இ.காங்கிரஸ், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் ஆகிய தோழமைக் கட்சிகள் இடையே உள்ள உறவு, வெறும் தேர்தல் உடன்பாடு மட்டும் அல்ல. லட்சிய உறவும் கூட."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

எம்.ஜி.ஆர். மந்திரிசபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி சார்பில் தமிழக ஆட்சிப் பொறுப்பை கவர்னர் பட்வாரி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. கவர்னரின் ஆலோசகராக டி.என்.லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டார். இவர், அதுவரை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார்.

போதும் என்று நினைக்கின்றேன் இந்த பிளாஷ்பேக் ....

நன்றி: தினத்தந்தி காலசுவடுகள்....

4 கருத்துகள்:

  1. கடுப்பை காட்ட இப்படீல்லாம் வழி இருக்கா? தலைப்பை சொன்னேன்

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை பார்த்ததும் நான் நினைத்தேன்,,,இப்படி ஏதாவது ஏடாகூடமான தகவலாத்தான் இருக்கும்ன்னு...இருந்தாலும் வரலாற்று தகவல் அருமை.... நிறைய பேருக்கு இது உபயோகமாக இருக்கும். இன்னொரு சிறிய திருத்தம். அது தினத்தந்தியின் கால சுவடுகள் அல்ல...வரலாற்று சுவடுகள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஹி ஹி....தலைப்பு ஹாட்டா இருந்தாதானே நண்பர்கள் வராங்க....அதான்...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....