26 பிப்ரவரி 2012

மாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா?எப்படி கண்டுபிடிப்பது..?
சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.

உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.
நன்றி: பத்திரிக்கை செய்தி

10 கருத்துகள்:

 1. இங்கிலாந்து நாட்டின் கார்டியன் (Guardian News paper) நாளேட்டில் வந்துள்ள ஒரு தகவலின்படி, பிரிட்டனில் உள்ள இதயநோய் ஃபவுண்டேசன் ஒன்று எடுத்த சர்வேயில் கண்டுள்ளபடி பத்து பேர்களில், நான்கு பேர்கள் - ஹாலிவுட் சினிமாக்களில், கதாபாத்திரங்களுக்கு எப்படி இதயநோய் வருகிறது என்பதை வைத்து தெரிந்துகொள்வதாக - கற்றறிவதாக வந்த செய்திகள்பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

  ஆனால், அவர்களுக்கு இதய நோய் - மாரடைப்பு (Heart Attack) இப்படித்தான் வரும் என்பது சினிமாக்களில், மார்பு பகுதியில் நெஞ்சு வலி வருவது, கையைப் பிடித்துக்கொண்டு வீழ்ந்து துடித்து இறந்துவிடுவது போன்று காட்டப்படுகிறது.

  நிகழும் எல்லா வகையான இதய நோய் - மாரடைப்புகளும் இப்படித்தான் வரும் என்பது போன்ற ஒரு தவறான எண்ணத்தைத் திரைப்படம் பார்ப்பவர்கள் மனதில் ஏற்படுத்தி, தவறான அனுமானத்தை அவர்கள் பெற வாய்ப்பு ஏற்படுகிறது.

  இதனால் ஏற்படும் நன்மையைவிட தீமையே அதிகம்; காரணம், இந்த மாதிரி அறிகுறிகள் - வலிகள் வந்தால்தான், ஒருவருக்கு இதயநோய் - மாரடைப்பு என்று தவறாக கணக்குப் போட்டு ஏமாறும் அபாயம் அதில் உள்ளது என்று பிரிட்டிஷ் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

  நடைமுறையில், ஒருவருக்கு இதய நோய் (Heart Attack) பல ரூபத்தில், பல விதங்களில் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை பொதுமக்கள் அறிந்திருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று அவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

  ஒவ்வொரு வகையில், அந்த மாரடைப்பு நோயின் அறிகுறிகள் ஒரே மாதிரி இருக்காது; மாறாக, அப்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அது வரக்கூடும்!

  எளிதில் கண்டறிய முடியாத நிலைமைகளும் உண்டு.

  பொதுவாக, மார்பில் மிகவும் அழுத்தி ஒருவர் ஏறி உட்கார்ந்ததுபோல வலியும், அவ்வலி கழுத்து, தாடைகள், இடது கை, வலது கைப் பகுதியில் பரவிடும் நிலையும், கடுமையாக வேர்ப்பதும் ஏற்படும்போது, அது நிச்சயம் இதயநோய் தாக்குதல்தான் என்று எவரும் அறிந்து கொள்ளலாம்.

  பிறகு பார்க்கலாம் என்று அலட்சியம் காட்டக்கூடாது.

  ஒரு வினாடிகூடத் தாமதிக்காமல், உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் செல்வதோடு, நடந்து செல்வதோ - தானே காரோட்டிக் கொண்டுச் செல்வதோ கூடவே கூடாது. தாகம் எடுக்கிறது, தண்ணீர் என்று கேட்டால்கூட, தண்ணீர் குடிப்பதும் கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்!

  சில நேரங்கள் வலி மிகவும் லேசானதாகவோ, மிகவும் மந்தமானதாகவோ கூட இருக்கலாம்! இதயத்தில் லேசான சங்கடம் இருப்பதுபோல நாம் உணரக்கூடும்.

  விவரம் தெரிந்த சிலர்கூட அது வாயு (Gas)த் தொல்லை, வாயு (Gas) அதிகம் இருப்பதால் இப்படி ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்துக் கொண்டு அலட்சியப்படுத்தி - பிறகு பலியாகும் கொடுமைக்கு ஆளாகி விடுகிறார்கள்!

  சில நேரங்களில், நெஞ்சுவலி - முதுகுப் பக்கம் பரவி, வயிற்றிலும்கூட வலி தோன்றக்கூடும். அதையும்கூட நாம் ஏதோ ஒரு வலி அல்லது அஜீரணக் கோளாறு என்று அலட்சியப்படுத்துவதும் உண்டு!

  வாயுத்தொல்லை வயதானவர்களுக்குச் சர்வ சாதாரணம்தான் என்றாலும்கூட, பற்பல நேரங்களில் இதயநோய் அறிகுறிகளை வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்துவதும்; வாயுத்தொல்லை கண்டு இதயநோய் என்று அஞ்சுவதும் - அடிக்கொருதரம் ஏற்படுவது வழமைதான் என்றாலும், அலட்சியம் இல்லாமல் கவனத்துடன் இருப்பது மிகவும் அவசியமே!

  தூங்கும்போது சிலருக்கு உயிர் பிரிகிறது - (Silent Heart Attack) - எந்த வலி அறிகுறியும் இன்றி ஏற்படும் இதயநோயும்கூட உண்டு.
  இதற்கு முன் இவருக்கு எந்த வலியும் இதயத்தில் வந்த அறிகுறி, புகார் கூறியதே இல்லை என்று அருகில் இருப்போர், அவரை இழந்தோர் கூறுவது உண்டு. அப்படியும் நிகழலாம்!

  மன அழுத்தம் (Stress) இதற்குக் காரணமாகப் பெரிதும் அமைந்துவிடுகிறது!

  சில முன்னெச்சரிக்கைகள் தேவை:
  1. எந்த அறிகுறி என்றாலும், உடலைப் பொறுத்தவரை அலட்சியப்படுத்தக் கூடாது.
  2. மருத்துவர்கள் கூறவேண்டும். நாமே ஒரு முடிவுக்கு - தவறான முடிவுக்கு வருதல் கூடாது. உடனே காலதாமதம் இன்றி (Rush) மருத்துவர்களிடம் செல்லவேண்டும்.
  3. 50 வயதுக்குமேல்தான் இது வரும் என்ற மூட நம்பிக்கை கூடாது; எந்த வயதினருக்கும் வரலாம். எனவே, அலட்சியப்படுத்த வேண்டாம்; வயது அளவுகோல் கூடாது.
  4. ஆண்டுக்கொரு முறை முழு உடல் மருத்துவப் பரிசோதனை தேவை. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாய்ப்பிருப்பின் 6 மாதங்களுக்கு ஒருமுறை செய்தாலும் விரும்பத்தக்கது!

  பிரிட்டனில் ஆண்டுக்கு 250,000 பேர்கள் இதயநோய்க்குப் பலியாகிறார்கள். அமெரிக்காவில் இதைவிட அதிகம். இந்தியாவும் இதிலும் போட்டி போடும் நாடாகி வருகிறது. எனவே, அலட்சியப்படுத்தாமல் உடல்நலம் பேணுங்கள்
  http://files.periyar.org.in/viduthalai/20080806/news08.html

  பதிலளிநீக்கு
 2. மாரடைப்பைத் தடுக்கும் சிகப்பு தக்காளி


  சிகப்பு தக்காளியை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மட்டுமல்ல, பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் வராமல் தடுக்கலாம் என்று பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  லண்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழான ப்ளேட் லெட் என்ற இதழில் இதுபற்றி நிபுணர்கள் கூறியுள்ளனர். இதை லண்டன் டெய்லி மெயில், செய்தியாக வெளியிட்டுள்ளது.
  அதில் கூறியிருப்பதாவது:

  சிவப்பு தக்காளியில் உள்ள சிவப்பு நிறத்தை தருவது விகோபின் என்ற ரசாயனம் தான். அதுதான் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அப்படி சிவப்பு நிறம் தரும் விகோபின்தான், கேன்சரை தீர்க்கும் அருமருந்தாக செயல்படுகிறது. தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் பாதிப்பு வெகுவாக குறையும்.

  அதுபோல், தக்காளியில் உள்ள விதை களை சுற்றி மஞ்சள் நிறத்தில் ஒருவித பசை போன்ற திரவம் உள்ளது. அதுதான் இப் போது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கோளாறுகளுக்கும் பலன் தருவதாக அமைந்துள்ளது.

  ரத்த நாளங்களில் ரத்தம் கட்டிப் போய் அடைப்பு ஏற்படுவதால்தான் மார டைப்பு மூளையில் ஸ்ட்ரோக் போன்றவை வந்து பலர் இறக்கின்றனர்.

  அதிலும், சிகரெட் பிடிப்பவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்வோர், அதிக மாத்திரை சாப்பிடும் பெண்கள், நுரையீரல் நோயாளிகள் போன்றவர்களுக்கு இப்படி ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.

  இதை இந்த சிவப்பு தக்காளியில் உள்ள மஞ்சள் திரவம்தான் தடுக்கிறது.

  பாதிக்கப்படும் பலரும் தக்காளி ரசத்தை சாப்பிட்டு வந்தாலே, பாதிப்பு இல்லாமல் இருக்கலாம் தக்காளி, கேன்சருக்கு மட்டுமல்ல, மாரடைப்பு, ஸ்ட்ரோக்குக்கும் அரிய மருந்துகள்தான்.

  நன்றி: 'முல்லைச்சரம்' ஆகஸ்ட் 2008

  பதிலளிநீக்கு
 3. மாரடைப்பைத் தடுக்க கொழுப்புச் சத்தை குறைக்கும் உணவுகள்

  இந்தியாவில் புற்றுநோயால் மரணமடைபவர்களை விடவும், இதயநோயால் மரணமடைபவர்கள்தான் அதிகம் பேர். பெரும்பாலான இதயம் சார்ந்த நோய்களுக்கும் மாரடைப்பால் ஏற்படும் திடீர் மரணங்களுக்கும் கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுவதே முக்கிய காரணமாய் அமைகிறது.


  கொழுப்புச் சத்து அதிகம் காணப்படுவது ஆபத்து என்றாலும் நமது உடலுக்கு தேவையான அளவு கொழுப்புச் சத்தை பராமரிப்பதும் அவசியம் ஆகும்.

  நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள் ஏ,டி,இ,கே போன்றவைகள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலுக்குள் செலுத்தப்படுகிறது.

  செல்களின் வளர் சிதை மாற்றத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் கொழுப்பு அவசியமாகும்.

  தோலை பராமரிக்கவும், ஆண், பெண் உணர்ச்சிகளை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்திக்கும் கொழுப்புச் சத்து மிகவும் இன்றியமையாததாகும்.

  நாம் உண்ணும் உணவின் மிகுதியான சத்துப் பொருள்கள் உடலுக்குள் கொழுப்பாக சேர்த்து வைக்கப் படுகிறது. நாம் உணவின்றி இருக்கும் காலங்களில் தேவைப்படும் சத்தானது சேர்த்து வைக்கப்பட்ட கொழுப்பிலிருந்தே பெறப்படுகிறது.

  கொழுப்புகளில் நன்மை செய்யும் கொழுப்புகள், தீமை செய்யும் கொழுப்புகள் என்று இருவகை கொழுப்புகள் உள்ளன.

  தீமை செய்யும் கொழுப்புகள் அதிகமாகும்போது நமது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.

  அடர்வு குறைந்த கொழுப்பு தீமை செய்யும் கொழுப்பாகும்.

  அடர்வு மிகுந்த கொழுப்பு நன்மை செய்யும் கொழுப்பாகும்.

  அடர்வு குறைந்த கொழுப்பு ரத்தக் குழாய்களிலும் இதயப் பகுதிகளிலும் படிமங்களை ஏற்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு தடை உண்டாக்குவதன் மூலம் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கிறது.

  மாறாக அடர்வு மிகுந்த கொழுப்புகள் தீமை செய் கொழுப்பு ரத்தக்குழாய்களில் படிவதைத் தடுப்பதுடன் அவ்வாறு படிந்த கொழுப்பு படிவங்களையும் வெளியேற்ற பயன்படுகிறது.

  மொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும்.

  200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும்பட்சத் தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.

  240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும்.

  உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும். பெண்களை பொருத்த வரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும்.

  குறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும்.

  ட்ரை கிளிசரைடுகள் 150க்குள் இருக் கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமாகும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500-க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.

  கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்:

  1. கொழுப்பைக் குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.

  2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.

  3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.

  4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.

  5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.

  6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.

  7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவை யான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.

  8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

  9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.

  10. சோயா, கோதுமை போன்ற தானியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

  http://viduthalai.periyar.org.in/20101101/news19.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எழுதிய ஒரு பதிவுக்கு இலவசமாக இரண்டு பதிவுகளை அளித்தமைக்கு நன்றி...பயனுள்ள தகவல்கள்....

   நீக்கு
 4. பயனுள்ள தகவல் நன்றி

  பின்னுட்டம்: மேலும் பல தகவல் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 5. தங்களின் பதிவின் கருத்துகளுக்கும் வாஞ்சூர் அவர்களின் மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றி. நம்மால் முடிந்த அளவு கட்டுப்பாடோடு உண்டு வாழ்வோம்...மற்றது எல்லாம் அவன் கையில். இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....