14 டிசம்பர் 2010

கலைவாணரை நாமும் தெரிந்துகொள்வோம்......


நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் (என்.எஸ்.கே.) பிறந்தது கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி. அப்பா சுடலையாண்டி பிள்ளை, தாய் இசக்கியம்மாள். பிறந்த வருடம் 1908 நவ. 29 ஆம் நாள். ஏழு பே‌ரில் இவர் மூன்றாவது பிள்ளை. வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் படிப்பு தடைபடுகிறது.

என்.எஸ்.கே.-யின் ஆரம்ப நாட்கள் கடுமையானவை. காலையில் டென்னிஸ் கோர்ட்டில் பந்து பொறுக்கிப் போடும் வேலை. பிறகு மளிகைக் கடைக்கு பொட்டலம் மடிக்க‌ச் செல்வார். மாலையில் நாடகக் கொட்டாயில் தின்பண்டங்கள் விற்பார். நாடகம் அவரை மிகவும் ஈர்த்தது. மகனின் விருப்பம் அறிந்த தந்தை ஒழுகினசே‌ரியில் நாடகம் போட வந்த ஒ‌ரி‌ஜினல் பாய்ஸ் கம்பெனியில் அவரை சேர்த்துவிடுகிறார். சிறுவனின் நாடக வாழ்க்கை ஆரம்பமாகிறது.

பாய்ஸ் நாடக கம்பெனியிலிருந்து டி.கே.எஸ். சகோதரர்களின் ஸ்ரீ பால சண்முகானந்தா நாடக சபையில் சேர்கிறார் கிருஷ்ணன். அங்கிருந்து பால மீனரஞ்சனி சங்கீத சபை. பல நாடக கம்பெனிகள் மாறினாலும் அவருக்கு டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபையே மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.

ஒப்பந்தத்தை மீறி பால மீனரஞ்சனி சங்கீத சபையிலிருந்து வெளியேறி மீண்டும் ஸ்ரீ பால சண்முகனாந்தா நாடக சபையில் சேர்கிறார். இதனால் கோபமுற்ற பால மீனரஞ்சனி சங்கீதா சபை ஜெகன்னாத அய்யா, கிருஷ்ணன் மீது பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் பொய்யாக புகார் தருகிறார். ஆலப்புழையில் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கைது செய்யப்படுகிறார்.

இந்த முதல் கைதுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டார் கிருஷ்ணன். அந்த கைது தமிழ்நாட்டையே உலுக்கியது.

நாடகத்தில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே. தேசபக்தி நாடகத்தில் காந்தி மகான் கதை என்ற பெய‌ரில் வில்லு‌ப் பாட்டை சேர்த்து காந்தியின் மது அரு‌ந்தாமை கொள்கையை‌ப் பரப்பினார். இந்த நாடகத்தில் கலைவாணர் ராட்டையுடன் வரும் காட்சிக்காக நாடகம் தடைசெய்யப்பட்டது.

கிந்தனார் நாடகத்தில் பாகவதர் வேடத்தில் கலைவாணர் செய்யும் காலட்சேபம் பிரசித்திப் பெற்றது. அன்பே கடவுள் என்ற முகவுரையுடனே காலட்சேபம் தொடங்கும். இதில் கலைவாணர் எழுதிய ரயில் பாடல் குறித்து திராவிட நாடு பத்தி‌ரிகையில் கட்டுரை ஒன்று எழுதினா‌ர் அண்ணர். சாதி, மத ஏற்றத்தாழ்வை ரயில் இல்லாமல் செய்ததை அந்த பாடலில் குறிப்பிட்டிருந்தார் கலைவாணர்.

கரகரவென சக்கரம் சுழல
கரும்புகையோடு வருகிற ரயிலே
கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே
மறையவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஓழித்திட்ட ரயிலே.

நாடகத்தில் கலைவாணர் செய்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகம் போட்டிருக்கிறார். நாடக கம்பெனி ஏதேனும் நொடித்துப் போனால் கலைவாணருக்கு சேதி வரும். அவர் சென்று ஒரு நாள் நடித்துவிட்டு வருவார். அந்த நாடகம் கலைவாணர் நடித்தார் எனபதற்காகவே மக்களிடம் வரவேற்பை பெறும்.

கலைவாண‌ரின் திரை வாழ்க்கையை தொடங்கி வைத்த படம் எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதி. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமில்லாது பல ஜாம்பவான்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.‌ஜி.ஆர்., எம்.‌ஜி.சக்கரபாணி, டி.எஸ்.பாலையா, எம்.கே.ராதா, எம்.வி.மணி, கே.வி.தங்கவேலு ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.

தனது முதல் படத்திலேயே தனக்கான காட்சிகளை கலைவாணரே எழுதிக் கொண்டார். தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே. முதல் படம் சதிலீலாவதி என்றாலும் திரைக்கு முதலில் வந்த படம் மேனகா. இது கலைவாணர் நடித்து வந்த நாடகம். திரைப்படமாக எடுத்த போது நாடகத்தில் கலைவாணர் நடித்து வந்த சாமா அய்யர் வேடத்தை அவருக்கே அளித்தனர்.
காலத்தால் அழியாத கலைஞன் கலைவாணர்........

3 கருத்துகள்:

  1. //தமிழ் திரையில் நகைச்சுவைக்கென தனி ட்ராக் எழுதியவரும் அவரே//
    புதிய தகவல்! வாழ்த்துக்கள்! :-)

    பதிலளிநீக்கு
  2. தெரிந்துக்கொல்ள வேண்டிய தகவல்கள்

    பதிலளிநீக்கு
  3. காலம் எனும் கடலில் இன்றும் வாழ்கின்ற அலைகளைபோன்றவர் திருவாளர் என்.எஸ்.கே அவர்கள். வாழ்க அவரது புகழ். இந்த கண்முன் நிகழ்வை விளக்கிய நண்பருக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க உங்கள் எழுத்துப்பணி.

    அன்புடன் ராஜ்குமார்.

    http://aranthaiking.blogspot.com/2010/12/blog-post_10.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....